உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

அவிநாசி; அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அவிநாசியில் அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக அவிநாசி நகராட்சி, முத்து செட்டிபாளையம் புனித தோமையர் துவக்கப் பள்ளியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தினார். கலெக்டர் டாக்டர் மனிஷ் நாரணவரே, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சங்கமித்திரை, சி.இ.ஓ., (பொறுப்பு) காளிமுத்து, நகராட்சி தலைவர் தனலட்சுமி, கமிஷனர் வெங்கடேஸ்வரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, நகர செயலாளர் வசந்த்குமார், வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன் என பலர் பங்கேற்றனர். அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில், 2022ல், ஆண்டு குண்டடம் வட்டாரத்தில், 76 பள்ளிகளில், 1,429 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் துவங்கப்பட்டது. 2ம் கட்டமாக, 1081 பள்ளிகளில், 63,880 மாணவர்கள், மூன்றாம் கட்டமாக, 31 அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில், 1,733 மாணவர்கள் பயனடையும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, 4ம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 1,217 பள்ளிகளில், 72,251 மாணவர்கள் பயனடைகின்றனர்,'' என்றார்.  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பார்க் ரோடு, புனித ஜோசப் பள்ளியில் இத்திட்டம் துவங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அமித் தலைமை வகித்தார். தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மண்டல குழு தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தில், பயன்பெறும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் முக்கிய பிரமுகர்களும் உணவருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ