மின் இணைப்பு வழங்க லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை
திருப்பூர்:மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, முன்னாள் உதவி மின் பொறியாளருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, சிறுகளஞ்சியை சேர்ந்தவர் திருமலைசாமி, 48. கடந்த 2014ல் பருத்தி விதை அரைப்பு இயந்திரத்துக்காக, மின் இணைப்பு பெற, உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் இணைப்பு வழங்க, உதவி மின் பொறியாளர் நடராஜன், 62, லஞ்சமாக 15,000 ரூபாய் கேட்டுள்ளார்.இதையடுத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில், திருமலைசாமி புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில், லஞ்ச பணத்தை கொடுத்த போது, அதைப் பெற்ற நடராஜனை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.வழக்கை விசாரித்த, திருப்பூர் முதன்மை குற்றவியல் கோர்ட் நீதிபதி செல்லதுரை, நடராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.