உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலத்தில் மேற்கூரை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

பாலத்தில் மேற்கூரை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

உடுமலை; ரயில்வே சுரங்க பாதையின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளதால், பாலப்பம்பட்டி சுற்றுப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை பகுதியில் பல்வேறு இடங்களில் கிராம இணைப்பு ரோடுகள் மற்றும் பாதைகள் அமைந்துள்ளன. அவ்விடங்களில், ரயில்வே சுரங்க பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இப்பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி, அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக ரயில்வே நிர்வாகம் தரப்பில், சுரங்க பாலத்தின் இருபுறங்களிலும் மேற்கூரை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. பாலப்பம்பட்டி, தளி ரோடு உள்ளிட்ட பாலங்களில் இப்பணிகள் துவங்கி இழுபறியாக நடந்து வருகிறது. இந்நிலையில், பாலப்பம்பட்டி சுரங்க பாலத்தின் மேற்கூரை பலத்த காற்றுக்கு தாங்காமல், சரிந்து பாதையில் விழுந்துள்ளது. மேற்கூரை விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால், விபத்துகள் தவிர்க்கப்பட்டது. தற்போது அந்தரத்தில், தொங்கும் மேற்கூரையால், அவ்வழியாக பாலப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து அந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !