உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உள்விளையாட்டு அரங்கம் அமையுங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல்

உள்விளையாட்டு அரங்கம் அமையுங்க! அரசுக்கு வீரர்கள் வலியுறுத்தல்

உடுமலை; உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி, உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்ட காலத்தில், மாணவர்கள் விளையாட்டு பயிற்சி பெற, நேதாஜி விளையாட்டு மைதானத்தின் இடம் தானமாக பெறப்பட்டது. இப்பள்ளி மேம்படுத்தப்பட்ட பின்பு, பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கான மைதான வசதி ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் அதையே பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனால், நேதாஜி விளையாட்டு மைதானத்தில், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கான பொதுவான மைதானமாக பயன்படுத்தப்பட்டது.கிராமப்புற பள்ளி மாணவர்களும், நேதாஜி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஹாக்கி விளையாட்டில், திறன் வாய்ந்த பல வீரர்களைக்கொண்ட பகுதி என்ற பெருமையும் உடுமலைக்கு உண்டு. வளர்ந்து வரும் தலைமுறைகளும், இதேபோல், பயிற்சி பெற்று, சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டும் என பலரும் ஆர்வத்தோடு உள்ளனர்.இதற்கு பயன்படும் வகையில், நேதாஜி விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதுவரை அந்த கோரிக்கையும் கிடப்பில் மட்டுமே உள்ளது. பள்ளி மாணவர்களும், இளைஞர்களும், விளையாட்டு திறன்களை வளர்த்துக்கொள்ள மட்டுமே மைதானம் உள்ளது. வர்த்தக ரீதியாக போட்டிகளை நடத்த, இந்த மைதானத்தை பலரும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.போட்டிகள் நடத்தப்படும் போது, மாணவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் தடைபடுகிறது. போட்டிகளை நடத்தி மைதானத்தை பயன்படுத்திவிட்டு, குப்பையை கொட்டிச்செல்கின்றனர். மைதானத்தை பராமரிப்பதற்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. தற்போது, மைதானம் பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு பயிற்சி பெறுவோருக்கு என்பதை விடவும், வர்த்தக போட்டிகளுக்கு என்ற சூழல்தான் உருவாகி வருகிறது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் கோரிக்கை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி