மேலும் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அறிவுரை
06-Mar-2025
பல்லடம்: பல்லடத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், வணிகர்களுக்கான பதிவு சான்று முகாம் நடந்தது. வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி குழுவினர் கூறியதாவது:உணவு பாதுகாப்புத் துறை விதிமுறைகள் எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான் என்றாலும், அதனை பின்பற்றுவதில் தான் சுணக்கம் காட்டுகிறோம். முக கவசம், தலைப்பாகை, கையுறை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில் சிரமம் இல்லையே. அன்றாடம் பயன்படுத்தும் இடத்தில் குப்பை தொட்டி வைத்தல், துருப்பிடித்த உபகரணங்களை பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்டவை மிகவும் எளிதாக பின்பற்றக்கூடியவை.ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ சான்று, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பயிற்சி சான்று வாங்குவதுடன், ஆண்டுதோறும் கடைக்கான லைசன்சை புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான பொருட்களையே வழங்குகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும். நம்மை தேடி வரும் வாடிக்கையாளருக்கு நல்ல பொருட்களையே தருகிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.வாங்கிய பொருள் வீணாகிறது என்பதற்காக, கெட்டுப்போன, அழுகிய, காலாவதியான பொருட்களை வாடிக்கையாளருக்கு வழங்கக்கூடாது. இன்று, பொதுமக்களே உடனுக்குடன் மொபைலில் போட்டோ எடுத்து புகார் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எனவே, புகார் உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்படுவது நீங்கள் தான். வாடிக்கையாளரை கவர்ந்து இழுப்பதற்காக, விதிமுறைகளை மீறாமல், நல்லவற்றை சொல்லி மார்க்கெட்டிங் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.முகாமில், 178 சாலையோர வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறை பதிவு சான்றுக்கு விண்ணப்பித்தனர். பங்கேற்ற வியாபாரிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
06-Mar-2025