கட்டட கழிவுகள் கொட்டும் மையமாக மாறிய கால்வாய்
உடுமலை; பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரையில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால், பாசனம் பாதிக்கும் அபாயம் உள்ளது. பி.ஏ.பி., உடுமலை கால்வாய் வாயிலாக, 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நகர பகுதியில், உடுமலை கால்வாய் கரையில் அமைந்துள்ள ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பெரியகோட்டை ஊராட்சி பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், கால்வாய்க்குள் கழிவுகள் விழுந்து, பாசன நீர் பாதிப்பதோடு, மடைகளில் அடைப்பு ஏற்பட்டு கடுமையாக பாதித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என பி.ஏ.பி., விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், உடுமலை பழநி ரோடு வெஞ்சமடை, எஸ்.வி., புரம் மற்றும் பெரிய கோட்டை ஊராட்சி பகுதிகளில், கால்வாய் கரையில் கடந்த சில மாதமாக கட்டட கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது. இக்கழிவுகள் கால்வாய்க்குள் விழுந்தால், பாசனத்திற்கு நீர் செல்வது முழுவதும் தடை ஏற்படுவதோடு, பாசன நீர் வழிந்து, கால்வாய் கரை உடைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரையில், கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.