ரூ.1 கோடியில் புற்றுநோயாளிகள் புத்துணர்வு மையம்
திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், புற்று நோயாளிகளுக்கு புத்துணர்வு மைய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது.கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ் குமார், முன்னிலை வகித்தார். புத்துணர்வு மைய கட்டட பணிக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வழங்கினார். அமைச்சர் சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.ரோட்டரி பொது நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் பேசுகையில், ''நமக்கு நாமே' திட்டத்தில், 90 கோடி ரூபாய் மதிப்பில், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் ரோட்டரி பொது நல அறக்கட்டளை சார்பில், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை மைய கட்டுமானப்பணி கடந்த, 2 ஆண்டுக்கு முன் துவங்கியது. பொதுமக்களின் பங்களிப்பாக செலுத்தப்பட வேண்டிய, 30 கோடி ரூபாயில், 20 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டது.புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வருவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கும் நோக்கிலும், அவர்களை புத்துணர்வுடன் வைக்கும் நோக்கிலும் அரசின் ஊக்குவிப்புடன் புத்துணர்வு மையம் அமைக்கப்பட உள்ளது; இங்கு சிறுவர்கள் விளையாட பூங்கா, பொழுதுபோக்க 'டிவி' உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, சிகிச்சை பெற வருவோரின் தன்னம்பிக்கை மேலோங்கி, நோய் பாதிப்பின் பயம் நீங்கும்; இது, அவர்களுக்கு மன ரீதியான உற்சாகத்தை தரும்'' என்றார்.அமைச்சர் சாமிநாதன் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி பேசுகையில், ''புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமானப்பணியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரடியாக கண்காணித்து வருவதால், நிர்வாக ரீதியான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன,'' என்றார்.மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மருத்துவக்கல்லுாரி டீன் முருகேசன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், திருப்பூர் ரோட்டரி பொது நல அறக்கட்டளை செயலாளர் கார்த்திகேயன், ஆலோசகர் நாராயணசாமி, செயலாளர் இளங்குமரன், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொருளாளர் அருள்செல்வம் நன்றி கூறினார்.