மறைவான பகுதியில் கஞ்சா விற்பனை அமோகம்? சுகாதார பிரச்னையில் தீர்வு எட்டாத சோகம்
திருப்பூர் மாநகராட்சி, 37வது வார்டில், கல்லம்பாளையம், ராயபுரம் மற்றும் எக்ஸ்டன்சன், ஸ்டேட் பாங்க் காலனி பத்து வீதிகள், ஸ்டேட் பாங்க் காலனி எக்ஸ்டன்சன் பகுதி, குமரப்பபுரம், விநாயகபுரம் மற்றும் விநாயகபுரம் விரிவு, எம்.ஜி.ஆர்., நகர், கல்லம்பாளையம் எட்டு வீதி, விரிவு பகுதிகள், லே-அவுட், சமாதானபுரம் பகுதிகள் அமைந்துள்ளன.துணை மேயர் வார்டு என்பதால், பெரும்பாலும் சொந்த வீடு உடையவர்கள் அதிகம் வசிப்பதால், 90 சதவீத சாலை பணிகள் முடிக்கப்பட்டு, பளிச்சிடுகிறது. தரைப்பாலத்துடன் சாலை இணைக்கும் சில இடங்களில் மட்டும் சாலை சேதமாகியுள்ளது.கல்லம்பாளையம் - வாய்க்கால் தோட்டம் நொய்யல் கரையோர எக்ஸ்ெடன்சன் பகுதியில் தார்ரோடு போட்டும், இருபுறமும் முட்புதர் வளர்ந்து வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் வகையில் முட்கள் நீட்டிக்கொண்டிருக்கிறது; ஆக்கிரமிப்பு முட்புதரை அகற்ற வேண்டும்.கல்லம்பாளையம் மூன்றாவது வீதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையத்தை சுற்றி முட்புதர்கள் காணப்படுகிறது. மழை பெய்தால், எந்நேரமும் மழைநீர் புகுந்து விடும் நிலையில் தாழ்வாக உள்ளது.முட்புதர்களை சுத்தம் செய்து, தரைத்தளத்தை உயர்த்திக்கட்ட வேண்டும். பொது வெளியில் மலம் கழித்தலை தடுக்க கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் விரிவான தண்ணீர் வசதி செய்யப்படாததால், திறக்கப்படாமல் அப்படியே உள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுத்தொல்லை
ஸ்டேட் பாங்க் காலனி அனைத்து வீதியிலும் சாக்கடை கழிவுநீர் வெளியேற 'டிஸ்போசல் பாயின்ட்' வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்டன்சன் பகுதியில் கால்வாய் முறையாக இல்லை. கழிவுநீர் வெளியேறிச் செல்ல வழியின்றி அப்படியே தேங்கி நிற்கிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.திறப்பு விழாவுக்கு முன்பே, குடிநீர் தொட்டிக்கு கீழ் அஸ்திவாரத்தை சிதைக்கும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நன்னீரால் கொசுத்தொல்லை பகலிலேயே அதிகமாகியுள்ளது.தொட்டியில் மெகா சைஸ் தேன்கூடு பயமுறுத்தும் விதமாக உள்ளது.கல்லம்பாளையம் சித்திவிநாயகர் கோவில் சந்திப்பில், சாக்கடை கால்வாய் இடிந்து சேதமாகியுள்ளது; விழும் முன் சீரமைக்க வேண்டும்.கால்வாய் கட்டும் பணி வார்டில் பிரதான சாலைகளில் துவங்கப்பட்டு மந்த கதியில் நடப்பதால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தடுமாறி சென்று திரும்புகின்றனர்.கட்டுமான பொருள் விலை உயர்வை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. துார்வாருதல் அவசரம்
காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில் இருந்து நொய்யலுக்கு பெரிய சாக்கடை கால்வாயில் கழிவுநீர் இந்த வார்டில், நான்குகி.மீ., க்கு பயணிக்கிறது. 15 அடி ஆழம் கொண்ட கால்வாய் என்பதால், குப்பை, இறைச்சிக்கழிவுகள் இவற்றிலேயே வீசியெறியப்படுகிறது. இதனால், கால்வாய் பயணிக்கும் குறுகலான இடம், வளைவுகளில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. 15 அடி ஆழம், எட்டடி அகலம் கொண்ட கால்வாய் என்பதால், மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தால், கால்வாய் அடைப்பு காரணமாக, வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்துவிடும் நிலை உள்ளது. குடிநீர் குழாயை மாற்றுங்க...
முதல் குடிநீர் திட்ட குழாய்கள் அதிகளவில் பதிக்கப்பட்ட பகுதியில் தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கான்கிரீட், ஸ்மார்ட் ரோடுகள் போடும் போது அழுத்தம் அதிகமாகி குழாய்கள் உடைப்பு ஏற்படுவதும், பிரதான குழாய் என்பதால், நாள் முழுதும் தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. ராயபுரம், நஞ்சப்பா ஸ்கூல் வீதி, ரவுண்டானா பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு மாதக்கணக்கில் சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. போலீஸ் ரோந்து தேவை
நகரின் மத்தியில் உள்ள வார்டில் பிரதான சாலை அகலமாக்கப்பட்டு விட்டது. மக்கள் தொகை, 25 ஆயிரத்தை நெருங்குகிறது. ராயபுரம், விநாயகபுரம், தீபம் பாலம், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் பகுதியை இணைத்து அரசு பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, 20ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. போதிய அளவில் சாலை வசதி இருந்தும், இன்னமும் பஸ் வசதி எட்டாக்கனியாகவே உள்ளது.ராயபுரம் துவங்கி ஸ்டேட் பாங்க் காலனி எக்ஸ்டன்சன் வரை சாலை ஒரு வழிப்பாதை போல் உள்ளது. சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் நொய்யல் ஆற்றை ஒட்டி அதிகளவில் செயல்படுகிறது. வெளிநபர்கள் புழக்கம் அதிகமாக இருப்பதால், பிறநாட்டவர், வடமாநிலத்தவர் அதிகளவில் வசிக்கும் இடமாக இந்த வார்டு உள்ளது.அதற்கேற்ப குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக குற்றம்சாட்டும் மக்கள், மறைவான பகுதிகளில் கஞ்சா விற்பனை இரவு நேரங்களில் நடக்கிறது. போலீஸ் ரோந்து வாகனங்கள் எங்கள் வீதிக்கு மட்டுமின்றி வார் டுக்குகூட வருவதில்லை என்கின்றனர்.சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள்நொய்யல் ஆற்றை ஒட்டி அதிகளவில் செயல்படுகிறது. வெளிநபர்கள் புழக்கம் அதிகமாக இருப்பதால், பிறநாட்டவர், வடமாநிலத்தவர்அதிகளவில் வசிக்கும் இந்த வார்டில்,குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக மக்கள்கூறுவதோடு, மறைவான பகுதிகளில்கஞ்சா விற்பனை இரவு நேரங்களில்நடப்பதாகவும் புகார் கூறுகின்றனர்.மழை வெள்ளத்தால் ஆபத்துமாநகராட்சி, 37வது வார்டு கவுன்சிலரும், துணை மேயருமான பாலசுப்ரமணியம் கூறியதாவது:அனைத்து வீதிகளுக்கும் உப்புத்தண்ணீர் குழாய் வசதி ஏற்படுத்தியுள்ளேன். பெரும்பாலான பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தாழ்வாக, தரைப்பாலத்துடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டிய இடங்களில் கான்கீரிட் சாலை அமைக்கப்படும். வார்டுக்குள் பெரிய பிரதான கால்வாய்க்குமூடி போடலாம்; மழை பெய்யும் போது, கால்வாய் பிடி கொள்ளாத அளவு இரண்டு மடங்கு மழைநீர் பெருக்கெடுத்து வரும், ஆபத்தாகி விடும்; மாநகராட்சியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மழை காலத்துக்கு முன்னதாக இக்கால்வாய் முழுதும் அடைப்பு ஏற்படாமல் இருக்க துார்வாரப்படும். குடிநீர் தேவைக்கு, கட்டப்பட்ட, 15 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டி விரைவில் திறக்கப்படும். இதனால், மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.