லொள் தொல்லை தாங்க முடியல; கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், மீண்டும் தெருநாய்களின் அட்டகாசம் ஆரம்பமாகியுள்ளதால், வீதிகளில் நடக்கும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.உடுமலை நகரின் எல்லையில் உள்ள கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகளில் தெருநாய்கள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளகியுள்ளனர்.குடியிருப்புகளின் அருகே, காத்திருந்து, வெளியே வருவோர் மீது பாய்வதும், பயமிறுத்தும் விதமாக குரைத்தும் அவர்களை அச்சத்துக்குள்ளாக்குகின்றன.பரப்பரப்பான வணிக வீதிகளிலும், கடைகளின் முன்பு கூட்டமாக சுற்றுவதால், பொதுமக்கள் கடைக்கு செல்வதற்கே பயப்படுகின்றனர். அவற்றை விரட்டவும் மக்கள் தயங்குகின்றனர்.இரவு நேரங்களில், வாகனங்களின் குறுக்கே வருவதையும் கவனிக்க முடியாமல், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.தெருநாய்களில் பலவும் காயமடைந்தும், நோய்வாய்பட்டும் இருப்பதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒன்றிய நிர்வாகம், கால்நடை மருத்துவதுறை இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.