விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்
உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ-நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்திற்கு, சின்ன வீரம்பட்டி, பெரியவாளவாடி, ஈரோடு, குறிஞ்சேரி, விளாமரத்துப்பட்டி, எஸ்.வி.,புரம், தளி, உடுமலை, கோவை, பொள்ளாச்சி, கொமரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 28 விவசாயிகள், 80 மூட்டை அளவுள்ள, 3,860 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ.118.86 முதல், ரூ.127.12 வரையும், இரண்டாம் தரம், ரூ.98.99 முதல், ரூ.115.69 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.கடந்த வாரம், ஒரு கிலோ கொப்பரை, 140 ரூபாய் வரை ஏலம் போன நிலையில், விலை திடீரென சரிந்ததால், நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து பாதியாக குறைந்தது.விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்கத்துவங்கியுள்ளதால், வரும் வாரங்களில் விலை உயரும் வாய்ப்புள்ளது.ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.