நோய்தாக்குதலால் காலிபிளவர் பாதிப்பு; விவசாயிகள் வேதனை
உடுமலை; காலிபிளவர் சாகுபடியில், நோய்த்தாக்குதல் காரணமாக, பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, கொள்ளுப்பாளையம் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.குடிமங்கலம் ஒன்றியம், கொள்ளுப்பாளையம் சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு காலிபிளவர் சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், சந்தையில், அப்பகுதியில், உற்பத்தியான காலிபிளவர் பூக்கள் முழுவதும், நோய்த்தாக்குதலுக்கு ஆளாகியிருந்ததால் வாங்க மறுத்துள்ளனர்.இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் விளைநிலங்களில் சென்று பார்த்த போது, செடியின், இலைகள் மீதும், காலிபிளவர் பூக்கள் மீது, தென்னை நார் துகள்கள் படிந்திருந்தது தெரியவந்தது.இத்தகைய துகள்களால், செடியின் வளர்ச்சி பாதித்து நோய்த்தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் தெரிவித்த புகார் அடிப்படையில், வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி விவசாயி சண்முகம் கூறியதாவது: காலிபிளவர் சாகுபடியில் அறுவடை தருணத்தில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, கடனாளியாகியுள்ளோம்.நடவுக்காக 14 ஆயிரம் நாற்று வாங்கினோம். அதற்கான செலவு கூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.தென்னை நார் துகள்களால், விவசாய சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறித்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.