மயான ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்
திருப்பூர்:''மயான ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்,'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், பல ஆண்டுகளாக ஹிந்து மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. மயானத்தை பராமரிக்கவும், மேம்படுத்தவும் அரசு முயற்சிப்பதில்லை. திண்டுக்கல், தேனி, கரூர், விழுப்புரம், திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டும், 159க்கும் அதிகமான பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில், சடலத்தை அடக்கம் செய்ய இடமில்லை. தமிழகத்தில் ஹிந்து மயான நிலத்தை மாற்று பயன்பாட்டுக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளது. அரசே பல இடங்களில் ஆக்கிரமித்துள்ளது. குப்பை தரம் பிரிக்கும் இடமாகவும், பொதுக்கழிப்பிடம் கட்டும் இடமாகவும், திட்டமிட்டு ஹிந்து மயானங்கள் அரசால் அபகரிக்கப்படுகின்றன. கோவை கல்லாமேடு பகுதியில், 60 சமாதிகளை அப்புறப்படுத்தி, ஆளும்கட்சி பிரமுகர்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஈரோடு சூரம்பட்டியில், மயான நிலத்தில் ரேஷன் கடை இயங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மயானங்கள் இப்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஈமக்கிரியை செய்யும் இடத்தில், சமூக விரோத செயல்களும் பகிரங்கமாக நடக்கின்றன. கோயில், கிணறு, மயானம் ஆகியவை பொதுவானதாக இருக்க வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்; அதுவே, சமுதாய ஒற்றுமைக்கு அடையாளமாக இருக்கும். மயான ஆக்கிரமிப்பாளர்களை, தமிழக அரசு சட்ட ரீதியாக அப்புறப்படுத்த வேண்டும். மயானம் செல்லும் வழித்தடங்களை மேம்படுத்தி, அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.