மாற்றமும்... மாறாததும் !
திருப்பூர் ; 'காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், கொசு மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும்' என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.வட கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு, குறிப்பாக, குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதியுற்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 'ஏடிஸ்' வகை கொசு பரவலால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது.இந்நிலையில், மழைக்காலம் என்பதால் குடியிருப்பு பகுதிகளில் புல், புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. எனவே, 'கொசு மருந்து தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன.சில ஊராட்சிகளில் கொசு மருந்து தெளிக்கும் உபகரணம், கொசு மருந்து தெளிப்பதற்கான பிரத்யேக ஆட்கள் இல்லை என்ற குறைபாடும் உள்ளது. எனவே, கொசு உற்பத்தியால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.