உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோழி திருடர்கள் பராக்... பராக்

கோழி திருடர்கள் பராக்... பராக்

'திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்' என்று கிராமங்களில் ஒரு சொலவடை உள்ளது. இது மாங்காய்க்கு பொருந்துகிறதோ இல்லையோ, தற்போது சிக்கன் பிரியாணிக்கும், நாட்டுக்கோழி வறுவலுக்கும் பொருத்தமாக உள்ளது. தற்போது ஆடு, கோழி திருட்டு அதிகரித்து வருகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை வந்து திருடிச் செல்வது; வீதிகளில் குப்பையைக் கிளறி உணவு தேடும் கோழிகளை திருடிச் சென்று உணவாக்கிக்கொள்வதும் நடக்கிறது. திருடர்கள் அதிவேக பைக்குகள் மற்றும் சொகுசு கார்களில்தான் வருகின்றனர். அவிநாசி, காங்கயம் போன்ற பகுதிகள் பெருமளவு கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு கோழி மற்றும் ஆடு வளர்ப்பு தனி தொழிலாகவும், விவசாய தோட்டங்களில் துணை தொழிலாகவும் செய்து வருகின்றனர். சமீப காலமாக ஆங்காங்கே மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் திருடப்பட்டு வந்தது. தற்போது வீடுகளின் முன்புறம் கூண்டுகளில் அடைத்து வைக்கப்படும் கோழிகள், தெருவில் சுற்றித் திரியும் கோழிகள் திருடு போகிறது. இவை வார இறுதி நாட்களில் தான் அதிகளவில் நிகழ்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ஆயிரக்கணக்கில் விலை போகக்கூடியவை. இதில் ஈடுபடும் நபர்கள், பெரிய அளவிலான திருட்டு தொழில் செய்யும் நபர்களாக இருக்க வாய்ப்பு குறைவு எனக்கூறும் கோழி வளர்ப்போர், போகிற போக்கில், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஜாலிக்கு திருடுவோராகக் கூட இருக்கலாம். இத்தகைய திருட்டில் ஈடுபடுவோர் ஏதாவது ஒரு இடத்தில் சிக்கிவிட்டால் அந்த விஷயம் பரவலாகி விடும். அந்தப் பகுதியை சில காலம் விட்டு விட்டு, வேறிடங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டுவர். இதைப் போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். திருட்டுக்கும்பலுக்கு சாதகம் கடந்த வாரம் சோமனுார், கருமத்தம்பட்டி சுற்றுப்பகுதியில் இதுபோல் இரவு நேரத்தில் கோழி திருட வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீடியோ பதிவில் சிக்கியது. அந்த பதிவு சுற்றுப்பகுதியில் வைரலான நிலையில், அவர்கள் எங்கும் வெளியே தலைகாட்டவில்லை. தற்போது காங்கயம் சுற்றுப்பகுதியில் சில நாட்களாக ஆங்காங்கே ஒன்றிரண்டு கோழிகள் திருடு போகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கோழி திருட்டுக்கு போலீஸ், கேஸ் என போய் என்ன ஆகப் போகிறது என்ற மன நிலையில் அதன் உரிமையாளர் விட்டு விடுகின்றனர். இதனால், இந்த விஷயம் வெளியே தெரியாமல் போய், திருட்டு கும்பலுக்கு சாதகமாகி விடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2025 06:58

இவர்கள் பெரும்பாலும் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் , வார இறுதியில் என்று சரியாக கூறியுள்ளீர்


சமீபத்திய செய்தி