பி.ஏ.பி., வாய்க்காலில் இறந்த கோழிகள் வீச்சு
பொங்கலுார்; பி. ஏ. பி., கால்வாயில் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பொங்கலுார், காங்கயம் பகுதிகளில் பலர் குப்பைகளை வாய்க்காலில் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதைத் தவிர சில கோழி பண்ணைகள் இறந்த கோழிகளை தண்ணீரில் வீசிவிடுகின்றனர். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையை கலெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்பு கடந்த சில மாதங்களாக இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசுவது குறைந்து இருந்தது.தற்போது மீண்டும் இறந்த கோழிகளை வாய்க்காலில் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ''நோய்வாய் பட்டு இறந்த கோழிகளால் தண்ணீர் பெருமளவு மாசுபடும். இதை குடிக்கும் கால்நடைகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை நோய் தாக்கி இறந்து விடுகின்றன. இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வாய்க்காலில் கோழி வீசுவதை நிரந்தரமாக தடுக்க முடியும்'' என்றனர்.