உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பார் ஆக மாறும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்; அப்புறப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

பார் ஆக மாறும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்; அப்புறப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

உடுமலை; கணக்கம்பாளையத்தில், 'குடி'மகன்களின் 'பார்' ஆக மாறியுள்ள பழைய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை வட்டாரத்துக்குட்பட்டு, 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இம்மையங்களுக்கான, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கணக்கம்பாளையம் ஜீவா நகரில் அமைக்கப்பட்டிருந்தது.இந்த அலுவலக கட்டடம் சிதிலமடைந்ததால், அதை பயன்படுத்த முடியாமல் தற்போது சர்தார் வீதியில் வாடகை கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது.ஜீவா நகரில் உள்ள கட்டடம், முற்றிலுமாக சிதிலமடைந்து, மேற்கூரை சிறிது சிறிதாய், உடைந்து விழுந்து கொண்டிருக்கிறது. பலமுறை கோரிக்கை அளித்த பின்பே, வாடகை கட்டடத்துக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.ஆனால், சிதிலமடைந்த இக்கட்டடம் குறித்து, பத்தாண்டுகளுக்கு மேலாகியும் சமூக நலத் துறையினர் இன்னும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இந்த அலுவலகத்தில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பயன்படுத்திக்கொள்வதற்கான வாகனம் ஒன்றும், நிறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர் பணிநிறைவு பெற்றவுடன், காலிப்பணியிடம் இதுவரை நிரப்பப்படவில்லை.இதனால், வாகனத்தை பயன்படுத்துவதும் முடங்கியுள்ளது. மலைகிராமங்களுக்கு செல்வது, தொலைதுார கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு செல்வதற்கு, வாகன வசதியில்லாமல் மருத்துவ குழுவினர் செல்லும் சமயங்களில் தான், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் செல்ல வேண்டியுள்ளது.தற்போது, கேட்பாற்று இருக்கும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம், 'குடி'மகன்களுக்கு இளைப்பாறவும், பொழுது போக்குவதற்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகம் அந்த கட்டடத்தில் செயல்படும் போதே, மாலை நேரத்தில், இப்பிரச்னை தொடர்ந்து நடந்தது.தற்போது, காலை நேரத்தில் கூட அலுவலகம் முன், அமர்ந்து அவர்கள் அட்டகாசம் செய்கின்றனர்.அலுவலகத்தை சுற்றிலும், மது அருந்திய பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும் மட்டுமே உள்ளது. சிதிலமடைந்து பயனில்லாமல், உள்ள கட்டடத்தை அகற்றி, புதிய அலுவலகம் அமைத்து தருவதற்கு, சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கன்வாடி மையத்தினரும், கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ