குழந்தைகளுக்கு தேவை தற்காப்பு விழிப்புணர்வு
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) 'யங் இண்டியன்ஸ்' - 'மாசூம்' துணைக்குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாதம்தோறும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.குழந்தைகள் தினத்தையொட்டி, 'மாசூம்' அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருடன் இணைந்து, விழிப்புணர்வு வாரம் கொண்டாடி வருகின்றனர். இன்று, குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்து, விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. சிறப்பு இயக்கம்
'யங் இண்டியன்ஸ் - மாசூம்' தலைவர் மேனகா கூறியதாவது:குழந்தைகளுக்கு, தற்காப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம். மொபைல் போன் பயன்படுத்துவதில், மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு, பாலியல் தொந்தரவு அதிகம் உள்ளது; பெற்றோர் கவனமாக பராமரித்தாலும், சிறுமிகளும் தற்காப்புடன் வளர பயிற்சி பெற வேண்டும். அதற்காகவே, தொடர்ந்து சிறப்பு இயக்கம் நடத்தி வருகிறோம்.மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் கொடுத்துள்ள புள்ளி விவரம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது; அதைக்கொண்டே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வெளியே தெரியாது
இந்தியாவில் மட்டும், 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு, பாலியல் அத்துமீறல் ஏற்படுவதாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; ஆண் குழந்தைகளுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.அரசு புள்ளி விவரப்படி, பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் என்பது, 47 சதவீதமாக இருக்கிறது. ஆண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், 53 சதவீதம் என்று தெரியவந்துள்ளது.பாலியல் அத்துமீறல் நடக்கும் சம்பவங்களை விசாரிக்கும் போது, நன்கு பரிச்சயமான நபர்கள் மூலம்தான் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், 95 சதவீதம் அளவிலான அத்துமீறல்கள் வெளியே வராமல் தடுக்கப்படுகின்றன. பொறுப்புணர்வு
'யங் இண்டியன்ஸ் -மாசூம்' மூலம், இந்தாண்டில் மட்டும், 130 முகாம் நடத்தியிருக்கிறோம்; மொத்தம், 9,400 குழந்தைகளுக்கு, 'குட் டச் - பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.பெண் மற்றும் ஆண் குழந்தைகளை தனித்தனியே வைத்து முகாம் நடத்துவதில்லை; ஒருங்கிணைந்த விழிப்புணர்வாக நடத்துகிறோம். இதன்மூலம் ஆண் குழந்தைக்கு, அக்கா - தங்கை மற்றும் தோழியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அரசு புள்ளி விவரப்படி, பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் என்பது, 47 சதவீதமாக இருக்கிறது. ஆண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், 53சதவீதம் என்று தெரியவந்துள்ளது.