பஸ் ஸ்டாண்டில் மட்டையாகும் குடிமகன்கள்
பல்லடம் : பல்லடம் பஸ் ஸ்டாண்டில், மதுபோதையில் மட்டையாகும் 'குடி'மகன்களால், பெண்கள், தாய்மார்கள் முகம் சுழிக்கின்றனர்.கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, பொள்ளாச்சி, உடுமலை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக பல்லடம் உள்ளது. இந்த பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, உள்ளூர் பொதுமக்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் வெளியூர் பயணிகள் என, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எந்நேரமும் பரபரப்பாகவே காணப்படும். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், 'குடி'மகன்கள் ஆங்காங்கே மட்டையாகிக் கிடப்பதை அடிக்கடி காண முடியும்.பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், மது அருந்தும் 'குடி'மகன்கள், ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும் மட்டையாகி விடுகின்றனர். அரைகுறை ஆடைகளுடன், ஆபத்தை உணராமல் விழுந்து கிடக்கும் குடிமகன்களால், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அரை நிர்வாணமாக 'குடி'மகன்கள் கிடப்பது, பெண்கள், தாய்மார்கள், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவியர் உள்ளிட்டோரை முகம் சுளிக்க வைக்கிறது.