தொடர் போட்டிகளால் வகுப்புகள் பாதிப்பு
உடுமலை, ;தொடர் போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடத்த கல்வித்துறை உத்தரவு போடுவதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக பள்ளி மேலாண்மைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடப்பு கல்வியாண்டு (2025 - 26) ஜூன் மாதம் முதல் துவங்கியுள்ளது. துவக்கத்தில், மாணவர்களுக்கு முதல் சில நாட்கள் நலத்திட்ட பொருட்கள் வழங்குவதற்கும், வரவேற்பு வகுப்புகளாகவும் நடத்தப்படுகிறது. ஜூலை முதல் குறுமைய போட்டிகள் துவங்கி விட்டன. அடுத்து, பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், மன்ற போட்டிகள், என தொடர்ந்து ஆக., இறுதி வரை நடக்கிறது. காலாண்டு நிறைவடைந்தும், முழுமையாக பாடம் நடத்த போதிய கால அவகாசம் இல்லாமல், அவசர நிலையில் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்களின் திறன்களை மேம்படுத்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு போட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் நடுவில் பாடம் நடத்துவதற்கு நேரத்தை எதிர்பார்க்க வேண்டிய சூழலாக உள்ளது. பள்ளி மேலாண்மைக்குழுவினர் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு திறன்களை மேம்படுத்த, நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம். ஆனால் தொடர்ந்து இருப்பது மாணவர்களையும் கட்டாயப்படுத்தி போட்டிகளில் சேர்க்க வேண்டியுள்ளது. காலாண்டு தேர்வும் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு பாடங்களும் முக்கியமானது. கல்வித்துறை பள்ளிகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து பின் போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.