சீதோஷ்ண மாற்றம்; நெல்லில் குலைநோய் தாக்கம் பயிர் மேலாண்மைக்கு வேளாண் துறை விளக்கம்
உடுமலை, ; அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், இரண்டாம் போகம் நெல் சாகுபடியில், நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் தென்படுவதால், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.மடத்துக்குளம் வட்டாரம், அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், ஏறதாழ, 1,250 ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில், வயலாய்வு மேற்கண்டனர்.அப்போது, அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில், இரண்டாம் போகம் நெல் நடவு மேற்கொள்ளப்பட்ட வயல்களில், 20 நாட்கள் வயதுடைய நெற்பயிரில், குலைநோய் தாக்குதல் தென்பட்டுள்ளது.தற்போது நிலவும் குறைந்த வெப்பநிலை, பனிப்பொழிவு காரணமாக குலைநோயானது வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. நெற்பயிரின் இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர் ஆகிய பகுதிகளில் பூசணத்தால் தாக்கப்பட்டிருந்தால், குலைநோய் பாதிப்பு அறிகுறியாகும். மேலும், இலைகள், இலைகளின் கழுத்துப்பகுதி, குச்சி, கழுத்து மற்றும் பேனிகல் என நெற்பயிர்களின் அனைத்து நிலத்தடி பகுதிகளும் பூஞ்சையால் தாக்கப்படுகின்றன.ஆரம்ப அறிகுறிகளாக, வெள்ளை முதல் சாம்பல்- பச்சை புள்ளிகள் அல்லது பழுப்பு நிற விளிம்புகள் கொண்ட சிறிய புள்ளிகள் இலைகளில் உருவாகின்றன.பழைய புள்ளி நீள்வட்ட அல்லது சுழல் வடிவிலான மற்றும் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில் நெக்ரோடிக் எல்லைகளுடன் பல புள்ளிகள் ஒன்றிணைந்து, பெரிய ஒழுங்கற்ற திட்டுகளை உருவாக்குகின்றன.இந்த நோயை கட்டுபடுத்த, விவசாயிகள் நோய் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிகப்படியான தளைச்சத்து உரங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். மேலும், உரங்களை மூன்று பங்காக பிரித்து அளிக்க வேண்டும். களையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.நாற்றுப்பருவங்களில் சூடோமோனாஸ் ப்ளோரசண்ஸ் பூஞ்சான மருந்தை, விதைகளுடன் கலந்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும், பகல் நேரங்களில் பூஞ்சான கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிப்பதை தவிர்க்க வேண்டும்.செயற்கை பூஞ்சான கொல்லி மருந்துகளான ட்ரைசைக்லசோல், ஒரு கிராமை, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது எடிபென்பாஸ், ஒரு மில்லி, ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பன்டாசிம், ஒரு கிராம், ஒரு லிட்டர் நீர் என, ஏதேனும் ஒரு மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவு பயன்படுத்தி குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.தற்போதைய சீதோஷ்ண நிலையில், இந்த பருவத்தில், குலை நோயானது அதிகமாக பரவும் சூழல் உள்ளதால் விவசாயிகள் உடனடியாக இந்த நோயினை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, மடத்துக்குளம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார்.