உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மும்பையில் சி.எம்.ஏ.ஐ., பேப்ரிக் கண்காட்சி; திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு

மும்பையில் சி.எம்.ஏ.ஐ., பேப்ரிக் கண்காட்சி; திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு

திருப்பூர்; இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் (சி.எம்.ஏ.ஐ.,) சார்பில், மும்பையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கண்காட்சிக்கு திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மும்பையில் வரும் ஏப்., 21 முதல் 23ம் தேதி வரை செயற்கை நுாலிழை ஆடைகள் மற்றும் ஆடை உற்பத்திக்கான உபகரணங்கள், இயந்திரங்கள் இடம் பெறும் கண்காட்சி நடைபெற உள்ளது.பாம்பே எக்ஸிபிஷன் சென்டர் வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அழைப்பு விடுத்து, அதன் சிறப்புகள் குறித்து விளக்கும் கூட்டம் நேற்று மாலை, திருப்பூர் 'சைமா' சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.'சைமா' சங்க பொதுச்செயலாளர் கோவிந்தப்பன் வரவேற்றார். தொடர்ந்து இந்திய ஆடை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், ராகுல் மேத்தா, தேவபிரசாத், நிரவ் சங்வி ஆகியோர் சி.எம்.ஏ.ஐ., பேப்ரிக் கண்காட்சி மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினர்.இந்திய ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கண்காட்சி தலைவருமான நவீன் சைனானி பயன்கள் மற்றும் வசதிகள் குறித்தும் விளக்கினார்.அவர் பேசுகையில், 'திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. சர்வதேச அளவில் செயற்கை நுாலிழை ஆடைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான வழி வகைகளை வழங்கும் வகையில், இக்கண்காட்சி அமையும். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முழுவதுமாக செயற்கை நுாலிழை ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டனர். தமிழகமும் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். அதற்கு இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமையும்' என்றார்.அதன் நிர்வாகிகள் திருப்பூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். இதில், முக்கிய அம்சமாக, ஜவுளி தொழிலில் மோசடி செய்யும் நபர்கள், முக்கிய நிறுவனங்கள் ஆகியன குறித்து கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பல பகுதிகளிலும் மோசடி செய்யும் நபர்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இது போன்ற நிறுவனங்களை 'பிளாக்லிஸ்ட்'ல் சேர்த்து, மேலும் மோசடிகள் நடைபெறாத வகையில் தடுப்பது ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது. 'சைமா' துணைத்தலைவர் பாலசந்தர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !