ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் ; கட்சி சார்பற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் : ரேஷன் கடையில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், 100 நாட்கள், 100 ரேஷன் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆட்டையாம்பாளையம் ரேஷன் கடை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இடுவாய் ஊராட்சியின் துணை தலைவர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஈஸ் வரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகம், நிர்வாகிகள் கோகுல் ரவி, தங்கவேல், ஈஸ்வரமூர்த்தி, வேலுசாமி, சின்னசாமி ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:கடந்தாண்டு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென, சிதறு தேங்காய் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டன. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர், நான்கு மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அமைச்சரின் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ரேஷன் கடை தோறும் போராட்டம் நடத்தி வருகிறோம்.விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், ரேஷன் கடையில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.