மேலும் செய்திகள்
மனுக்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
21-Mar-2025
'மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்; குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெயசீலன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பக்தவச்சலம், மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையர், பி.டி. ஓ.,க்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கலெக்டர் பேசியதாவது:மாவட்டத்தில், 6 நகராட்சிகள், 16 பேரூராட்சி, 13 ஊராட்சி ஒன்றியம் மற்றும், 265 கிராம ஊராட்சி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு திட்டம், நகர்ப்புற மேம்பாடு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் குடிநீர் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.கிராம ஊராட்சிகளில் மக்களின் புகார் அடிப்படையில், உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவலை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.மழைக்காலங்களில், அலுவலர்கள் தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்க வேண்டும். குடிநீர் குழாய்கள் பழுது ஏற்படும் போது, உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரிய தொட்டி வாயிலாக வினியோகிக்கப்படும் நீரின் அளவையும், ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக பெறப்படும் குடிநீர் அளவையும் கண்காணித்து, ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பேரூராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் தினசரி வினியோகிக்கப்படும் குடிநீர் அளவை, மின்னணு மீட்டர் பொருத்தி கண்காணித்து, சீரான குடிநீர் வினியோகம், தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார். - நமது நிருபர் -
21-Mar-2025