கல்லுாரி மாணவர்கள் மரபு நடை பயணம்; வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு
உடுமலை; உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற மரபு நடைப்பயணம் நடந்தது.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற, மரபு நடை பயணம் நடந்தது. கல்லாபுரம் அருகேயுள்ள மதகடிபுதூரில் உள்ள பழமையான பாறை ஓவியங்களை பார்வையிட்டனர்.ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் துறை அறிஞர் மூர்த்தீஸ்வரி, பாறை ஓவியங்கள், இங்குள்ள வெள்ளை ஓவியங்கள், சிவப்பு ஓவியங்கள், வெண்சாந்து ஓவியங்கள், பாறை கீறல்கள், பாறை குறியீடுகள் ஆகியவை குறித்து விளக்கியதோடு, உலகின் பல்வேறு தொல்லியல் சான்றுகளுடன், இங்குள்ள ஓவியங்கள் குறித்து ஒப்பிட்டு விளக்கினார்.தொடர்ந்து, புத்தர்குடிலுக்கு சென்று, தலைமை குரு புத்த தம்ம தம்மாச்சாரியார் கௌதம காளியப்பன், புத்தர் குடில், நடைமுறைகள், வாழ்வியல் குறித்து விளக்கினார். ஐவர் மலை எனப்படும் அயிரை மலை சென்று அங்கிருக்கும் சமணப்படுக்கைகள், சமணர் வாழ்வியல், சமணரின் சிற்பங்கள், கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகள் மற்றும் குவணச்சேரி உள்ளிட்ட பகுதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், நுால்கள் வழங்கப்பட்டது. கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் சிவசாமி, பேராசிரியர்கள் சதிஷ்குமார், லியாகத்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், ஆசிரியர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் ராஜாசுந்தரம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அருட்செல்வன் மற்றும் ருத்ரபாளையம் ராஜாராம், பாப்பம்பட்டி எல்லதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.