வணிக கட்டட வாடகை ஜி.எஸ்.டி., கிடையாது வணிகர்கள், தொழில் துறையினர் நிம்மதி
திருப்பூர்:வருவாயை பெருக்கும் நோக்கில், வணிக கட்டட வாடகையில், 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கலாம் என ஜி.எஸ்.டி., மத்திய சீராய்வு குழு பரிந்துரை செய்திருந்தது. இதற்கு தமிழகம் முழுதும் தொழில் துறையினர், வணிகர்கள், கடை வியாபாரிகளிடம் எதிர்ப்பு எழுந்தது. வாடகை உயரும்; உற்பத்தி செலவு பல மடங்கு உயரும் என தொழில் துறையினர் கவலை தெரிவித்தனர். அனைத்து வணிகர்கள் சங்கப்பேரவை சார்பில், திருப்பூரில் 18ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்தது. தமிழக அரசு சார்பிலும், இதுதொடர்பாக ஜி.எஸ்.டி., கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டது. கடந்த, 21ம் தேதி நடந்த, 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வணிக கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னலாடை தொழில் துறையினர் கூறுகையில், 'பெரும்பாலான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. கடைகளும், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. வாடகைக்கு வரிவிதிப்பு செய்தால், கடும் நிச்சுமையை சந்திக்க நேரிடும் என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.'தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது நிம்மதியாக இருக்கிறது; இனிவரும் ஆண்டுகளிலும் சீராய்வு குழு பரிந்துரையை ஏற்கக்கூடாது' என்றனர்.