உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி பாதுகாப்பு பணியில் 500 போலீசார் மக்களை அலைக்கழிக்கக்கூடாது என கமிஷனர் உத்தரவு

தீபாவளி பாதுகாப்பு பணியில் 500 போலீசார் மக்களை அலைக்கழிக்கக்கூடாது என கமிஷனர் உத்தரவு

திருப்பூர்: தீபாவளி நேரத்தில் மக்களைத் தேவையின்றி அலைக்கழிக்க வைக்கக்கூடாது என்று போலீஸ் கமிஷனர் லட்சுமி, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு, மூன்று நாளே உள்ளன. உள்ளூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடிய மக்கள் 'பர்சேஸ்' பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான ரோடுகளில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்புகள், போக்குவரத்து சீர் செய்ய போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதால், ஆங்காங்கே மக்கள் கூட்டத்தை பொறுத்து தற்காலிகமாக போக்குவரத்து மாற்றங்களை போலீசார் மேற்கொள்ள ஆலோசனை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வெளியேறும் புது மார்க்கெட் வீதியில் மட்டும் கூட்டத்தை பொறுத்து மாற்றம் செய்யப்படும். மக்களை தேவையின்றி அலைக்கழிக்க வைக்கக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.அத்தியவாசிய தேவைகளில் ஈடுபடும் கனகரக வாகனங்களை தவிர்த்து, மற்ற கனரக வாகனங்கள் மாநகரில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். அந்த வாகனங்கள் புறநகரில் உள்ள ரோடுகள் வழியாக செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பிரதான ரோடுகள் என, பல இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை துவக்கியுள்ளனர். இதையொட்டி, ஸ்டேஷன் போலீசார், ஆயுதப்படை, பயிற்சி போலீசார், பட்டாலியன் போலீசார் என, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய மக்கள், அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் அளித்து செல்லலாம், இரவு நேரத்தில் கூடுதலாக அந்த பகுதியில் ரோந்து மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் ஜேப்படி போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க, 'மப்டி' போலீசார் மக்களுடன் மக்களாக இருந்து வருகின்றனர். அனைத்து பகுதிகளில் டூவீலர், பேட்ரோல் வாகனங்களில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை