கூட்டுறவு பணியாளருக்கு கருணை ஓய்வூதியம் விதிமுறைகள் சரிவர செயல்படுத்த வேண்டும்
திருப்பூர் : கூட்டுறவுத்துறை பணியாளர்கள் ஓய்வு பெறும் போது, கருணை ஓய்வூதியமாக, மாதம், 1,000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒழுங்குமுறை விதிமுறைகள் தொடர்பாக, கூட்டுறவு பதிவாளர் சுப்பையன், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும்,சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து வகை சங்கங்களிலும், கருணை ஓய்வூதிய நிதியத்துக்கு பிரீமியம் செலுத்தி, ஓய்வு பெற்ற பணியாளருக்கு, மாதம், 1000 ரூபாய் கருணை ஓய்வூதியமாக வழங்கப்படும். பணிக்காலத்தில், 40 வயது வரை, 41 முதல் 45 வயது, 46 முதல் 50 வயது, 51 முதல் 55 மற்றும் 56 முதல் 60 வயது வரை என, வயதுக்கு ஏற்ப பிரீமிய தொகை வசூலிக்கப்படும். மொத்த பிரீமியத்தில், சங்கம் சார்பில் 50 சதவீதம் செலுத்தப்படும்.ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால், வசூலிக்கப்பட்ட பிரீமிய தொகை மற்றும் சங்கம் செலுத்திய பிரீமிய தொகைக்கு, 6 சதவீத வட்டி கணக்கிட்டு, திருப்பி அளிக்கப்படும்.பணியாளர், ராஜினாமா செய்யும்பட்சத்தில், அவர் செலுத்திய பிரீமியத்தொகைக்கு மட்டும் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். பணிகாலத்தில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டால், அவருடைய பிரீமியத்தையும், சங்கம் செலுத்த வேண்டும்; பணி நீக்கம் முடிந்த பிறகு, சங்கம் செலுத்திய தொகையை, சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டவர், ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டவர், பணியில் இருந்து தன்னிச்சையாக விலகியவர், கிரிமினல் குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கருணை ஓய்வூதியம் பெற இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு வெற்றி
தமிழ்நாடு அரசு ரேஷன் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,''கடந்த நான்கு ஆண்டுகளாக, ஓய்வு பெற்ற பணியாளருக்கு, ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த, 2021 முதல் நடந்த போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. தற்போது, தமிழக அரசு சார்பில், கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கான ஒழுங்குவிதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தகுதியான பணியாளருக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டுமென, கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.