முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் மோசடி செய்தவர் மீது புகார்
திருப்பூர் : முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர கூறி, பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். திருப்பூர் போயம்பாளையம், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட திருப்பூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருமுருகன்பூண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் வாயிலாக, எம்.எம்., மார்க்கெட்டிங் என்கின்ற ஆன்லைன் நிறுவனம் குறித்து தெரிந்தது. அதில், 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களுக்கு தினமும், 700 ரூபாய் தரப்படுவதாக கூறினார். இதேபோல், மற்றொரு திட்டத்தில், 70 நாட்கள் அன்றாடம், 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறினார். இதனை நம்பி, பலரும் சில ஆயிரங்கள் முதல் லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இந்த அனைத்து விதமான வணிக பரிமாற்றங்களும், மார்க்கெட்டிங் மாஸ்டர் என்ற செயலி வழியாக செலுத்தினர். கடந்த, 21ம் தேதி முதல் அந்த செயலி வேலை செய்யவில்லை. சந்தேகமடைந்து சரவணனிடம் கேட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து, எங்களது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.