மேலும் செய்திகள்
முகவர்கள் சுணக்கம் ஆவின் பால் விற்பனையில் சரிவு
16-Sep-2025
பல்லடம்:'பால் கொள்முதலுக்கான பணத்துக்கு பதிலாக, பால்கோவா, நெய் பெற்றுக்கொள்ளுமாறு பால் உற்பத்தியாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்' என, ஆவின் நிர்வாகம் மீது, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் மாநில ஊடகப்பிரிவு செயலர் ஈஸ்வரன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், 300க்கும் அதிகமான ஆவின் பால் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் பால் வழங்கி வருகின்றனர். சில நாட்களாக, கொள்முதல் செய்த பாலுக்கான பணத்தை வழங்காமல், பால்கோவா, நெய் ஆகிய மதிப்பு கூட்டு பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு, அதிகாரிகளால் விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இது பால் உற்பத்தியாளர்களை நசுக்கும் செயல். ஆவின் கொள்முதல் நிலையங்களில், லிட்டர் 25 -- 30 ரூபாய் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பசும்பாலுக்கு லி., 45 ரூபாய்; எருமை பாலுக்கு, 60 ரூபாய் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம். கட்டுப்படியாகாத விலை காரணமாக, எண்ணற்ற விவசாயிகள், ஆவின் நிறுவனத்தை தவிர்த்து, தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கு சென்றுவிட்டனர். இருப்பினும், பெரும்பாலான விவசாயிகள், இன்று வரை ஆவின் நிறுவனத்துக்கு மட்டுமே பால் வழங்கி வருகின்றனர். ஆவினில், விற்பனை செய்வதற்கு என தனிப்பட்ட துறை உள்ளது. அவர்களை வைத்து, விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து, கால்நடை விவசாயிகளை இவ்வாறு துன்புறுத்துவது ஏற்புடையதல்ல. இதை ஆவின் நிர்வாகம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்தமாக ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.
16-Sep-2025