திருப்பூர் : பிளஸ் 2 மொழித்தாள் தேர்வுகள் முடிந்த நிலையில், நேற்று முக்கியத் தேர்வுகள் துவங்கியது. கணினி அறிவியல் தேர்வு எளிமையாக இருந்ததால், தேர்வெழுதிய மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வெழுத, 6,916 பேர் விண்ணப்பித்திருந்தனர். 6,887 பேர் தேர்வெழுதினர்; 29 பேர் தேர்வுக்கு வரவில்லை. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வை, 7,384 பேர் எழுத வேண்டும்; 50 பேர் தேர்வறைக்கு வரவில்லை; 7,334 பேர் எழுதினர்.நேற்று, உயிர்வேதியியல் தேர்வை, 25 பேரும், சிறப்பு தமிழ் தேர்வை, 41 பேரும், மனையியல் தேர்வை, 42 பேரும், அரசியல் அறிவியல் தேர்வை, 25 பேரும், புள்ளியியல் தேர்வை, 658 பேரும் எழுதினர். கட்டாய வினா எளிது
கணினி அறிவியல் தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கூறுகையில்,'பாடங்களுக்கு பின்புறம் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தன. 15 ஒரு மதிப்பெண்ணில் ஒன்று மட்டும் யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண்ணில் கட்டாய வினா இதற்கு முன் திருப்புதல் தேர்வுகளில், பயிற்சி வினாக்களில் கேட்கப்பட்டது. வினாத்தாள் எளிமையாக இருந்ததால், பொறுமையாக விடையளிக்க முடிந்தது. நல்ல மதிப்பெண்களை பெற முடியும்,' என்றனர்.பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணினி அறிவியல் ஆசிரியர் அகிலா கூறுகையில், ''பதினைந்து ஒரு மதிப்பெண்ணும் எளிதில் விடையளிக்கும் வகையில் இருந்தது. இவை நிச்சயம் இடம் பெறும் என எதிர்பார்த்த கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. கட்டாய வினாக்களும் ஏற்கனவே கேட்கப்பட்டவை. ஐந்து மதிப்பெண் வினாக்களும் எளிதில் விடை எழுதியிருக்க முடியும்,'' என்றார்.நாளை மறுநாள் (11ம் தேதி) பிளஸ் 2 வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வு நடக்கவுள்ளது.