கொளுத்தும் வெயிலால் கவலை; நிலைப்பயிர்களுக்கு சிக்கல்
உடுமலை : பாசன காலம் துவங்கியுள்ள நிலையில், போதிய மழை பெய்யாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், இந்தாண்டு, கோடை கால மழையும், தென்மேற்கு பருவமழையும் போதியளவு பெய்யவில்லை.இருப்பினும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பெய்த மழையால், அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பல வகை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பாசன காலத்தில் மழை பெய்தால், நிலைப் பயிர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்; நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், கடந்த ஒரு வாரமாக பகலில், வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து, வறட்சியான வானிலை நிலவி, நிலைப்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.விரைவில், வடகிழக்கு பருவமழை துவங்கினால், பாசன காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.