அங்கன்வாடி மையங்களில் மருத்துவ முகாம் நடத்துங்க
உடுமலை; அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை தீவிரப்படுத்த வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, விதவிதமான பெயர்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருகிறது.குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் தொற்று அதிகரிப்பது, பெற்றோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில், பனிப்பொழிவு அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு சளி, இருமல் தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.இதனால் பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமல் உள்ளனர். அங்கன்வாடி மையங்களிலும், 50 சதவீத குழந்தைகள் இந்த பாதிப்புக்கு ஆளாவதால், பெற்றோர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த எதிர்பார்க்கின்றனர்.அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய்த்தொற்றை தடுக்க, மையத்தை சுற்றிலும் சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கும் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது:உடுமலை சுற்றுப்பகுதியில், பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் அங்கன்வாடி மையங்களிலும் தரைதளம் கூட மிகவும் குளிர்தன்மையுடன் உள்ளது.மேலும், தற்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்னை தொற்று நோய்க்கான அறிகுறியா இல்லையா என்பதும் தெரியாமல் சிலர் அலட்சியமாக விடுகின்றனர்.இதனால் மற்ற குழந்தைகளுக்கும் பரவுகிறது. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு முறையான மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.