பள்ளிகளில் இணைய வசதி பெறுவதில் குழப்பம்; கல்வித்துறையின் அறிவிப்பால் சிக்கல்
உடுமலை; அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இணைய வசதி பெறுவதற்கு கல்வித்துறையின் மாறுபட்ட அறிவிப்புகளால், பள்ளி நிர்வாகத்தினர் சிக்கலில் உள்ளனர்.அரசு துவக்க பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் அமைப்பதற்கு, நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் இணைய வசதி வழங்கப்பட்டது.பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாயிலாக, பள்ளிகளில் தொடர் இணைய சேவை பெறுவதற்கு, கல்வித்துறை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியது. இதன்படி பள்ளிகளிலும் இணைய சேவை பெறப்பட்டது.ஆனால், பெரும்பான்மையான கடைகோடி கிராமப்பகுதிகளில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் வாயிலாக, இணைய சேவை பெற முடியாமல் இருந்தது. இவ்வாறு உள்ள பள்ளிகளில், மாற்று நிறுவனத்திலிருந்தும் இணைய சேவை பெறுவதற்கு கல்வித்துறை அனுமதி அளித்தது.தற்போது மீண்டும் பி.எஸ்.என். எல்., நிறுவனத்துக்கு சேவை மாற்ற வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'ஏற்கனவே பி.எஸ்.என்.எல்., சேவை கிடைக்காமல் பல மாதங்களாக காத்திருந்த பின்தான், வேறு இணைய நிறுவனத்துக்கு மாற்றினோம். இந்நிலையில் அதை விடுத்து, மீண்டும் அதே சேவைக்கே மாற்ற வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்துகிறது. கிடைக்காத சேவையை எவ்வாறு பெறுவதென தெரியவில்லை. மீண்டும் துவக்கத்திலிருந்து வரும் வகையில் சேவைக்கு காத்திருப்பதுதான் நடக்கும்' என்றனர்.