உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தை ரோட்டில் நெரிசல்; ஆக்கிரமிப்புகளால் தொல்லை

உழவர் சந்தை ரோட்டில் நெரிசல்; ஆக்கிரமிப்புகளால் தொல்லை

உடுமலை; உழவர் சந்தை ரோட்டில் அதிகரித்துள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தும், எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். உடுமலை நகரம் கபூர்கான் வீதியில், உழவர் சந்தை அமைந்துள்ளது. இச்சந்தைக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்; நாள்தோறும் ஆயிரக்கணக்கான நுகர்வோரும் பயன்பெற்று வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் அருகில் அமைந்துள்ள இச்சந்தை வழியாக, ராமசாமி நகர் மற்றும் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில், உழவர் சந்தை முன் அதிகரித்து வரும் தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் கூட சீராக செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் நிலவுகிறது. சந்தை முன் அமைக்கப்படும் கடைகளுக்கு வருபவர்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திக்கொள்கின்றனர். இதனால், காலை, மாலை நேரங்களில், பள்ளி வாகனங்கள், மாணவ, மாணவியர் அவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். சந்தை முன், கிளை நுாலகத்துக்கு செல்லும் ரோடு பிரிகிறது; அவ்வழியாக காலை நேரங்களில் எவ்வித வாகனங்களும் செல்ல முடிவதில்லை. மாலை நேரங்களிலும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுவதால், நெரிசல் குறைவதில்லை. ராமசாமி நகர் ரயில்வே கேட் மூடப்படும் போது, நிலைமை மேலும் சிக்கலாகிறது. இது குறித்து, மக்கள் பல முறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம், நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். விபத்துகள் ஏற்படும் முன், தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி