வெயில் தாளாத மக்களுக்கு கடை முன் குளுகுளு வசதி
திருப்பூர் : தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை குளிர்விக்கும் விதமாக புதிய முயற்சியை திருப்பூர் பேக்கரி கடை ஒன்றில் மேற்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் மத்தியில் இது வரவேற்பை பெற்றுள்ளது.திருப்பூரில் வெயில் கொளுத்தி வருகிறது. பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் சந்தை எதிரேயுள்ள பேக்கரி ஒன்றில், முன்புறம் தென்னங்கீற்று ஓலை வேய்ந்த கூரை பந்தல் அமைத்துள்ளனர். வெயில் நேரத்தில் இதன் கீழ் குளுமையான நிலை நிலவுவதால், வாடிக்கையாளர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் கூட சில நிமிடம் நின்று செல்கின்றனர்.இது தவிர பந்தலைச் சுற்றி, குழாய்கள் பொருத்தி அதிலிருந்து குளிர்ந்த நீர் தெளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் தாளாமல் கடையின் முன் அமைந்துள்ள இந்த பந்தலில் நிற்கும் பொதுமக்கள், இதனால், சில நிமிடங்கள் குளுமையை அனுபவிக்கும் வாய்ப்பு பெறுகின்றனர். கடை உரிமையாளரின் இந்த புதுமையான முயற்சிக்கு வாடிக்கையாளர் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.