கூட்டுறவு துறை செயலர் கோவை, திருப்பூரில் ஆய்வு
திருப்பூர் : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூட்டுறவு துறை செயலர் இரு நாட்கள் ஆய்வு நடத்தவுள்ளார்.கூட்டுறவுத் துறை மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை முதன்மை செயலர் சத்தியபிரதா சாஹூ இரு நாள் ஆய்வுப் பணிக்காக கோவை வந்துள்ளார். இன்று, (23ம் தேதி) மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் கோவையில் நடக்கிறது.இது குறித்து, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாநில தலைர் ராஜேந்திரன் கூறியதாவது:கூட்டுறவு துறை செயலர் ஆய்வின்போது, செயலர் துறைவாரியாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிவதோடு, கள நிலவரத்தையும் அறிய வேண்டும். ரேஷன் கடைகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கடை ஊழியர்களிடமும் கேட்டறிய வேண்டும். கிடங்கிலிருந்து எடை குறைவாக வரும் பொருட்கள் விவரம் கடையில் இருப்பு கணக்கில் வேறுபடுகிறது. இதை சரி செய்ய மூட்டைகள் எடை சரி பார்த்து அதன்படி இருப்பு ஏற்ற வேண்டும். கார்டுதாரர்கள் விவரம் பதிவு செய்வது, சர்வர் பழுது காரணமாக ஏற்படும் சிக்கல், புதிய நடைமுறையில் பில் போடுவதில் நிலவும் தாமதம் ஆகியன குறித்தும் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.