உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதியற்ற பேனர் கணக்கெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவு 

அனுமதியற்ற பேனர் கணக்கெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவு 

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில், அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டு மற்றும் பேனர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொது இடங்கள், போக்குவரத்து நெருக்கடியும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இடங்களில் விளம்பர பேனர்கள், ஹோர்டிங்ஸ் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து சிக்னல்கள்; அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் பெரிய அளவிலான விளம்பர போர்டுகளும் அதிகளவில் உள்ளன. நகரப் பகுதியில் உள்ள பல்வேறு போக்குவரத்து சிக்னல்களில், அவற்றை அமைத்து பராமரிக்கும் நிறுவனங்களின் விளம்பர போர்டுகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பம், மையத்தடுப்புகள் என கிடைத்த இடங்கள் எல்லாம் விளம்பர பதாகை, பேனர், போஸ்டர் என எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், இஷ்டம் போல் வைத்துள்ளனர். இவற்றில் பல விளம்பர பேனர்கள் சேதமடைந்தும், முறையாக அமைக்கப்படாமலும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்த புகார்களின் பேரில் மாநகராட்சி நிர்வாகம், மாநகர போலீசார் இது போன்ற அனுமதியற்ற பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் இது போன்ற அனுமதியற்ற பேனர் வைத்த சில நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் இது குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நகரமைப்பு அலுவலர் அனைத்து மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தங்கள் பகுதியில் உள்ள விளம்பர பேனர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இதற்கான பிரத்யே படிவம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பகுதிவாரியாக விளம்பர பேனர் வைத்துள்ள வீதி, நிறுவனத்தின் பெயர், போர்டின் நீளம், அகலம், அமைக்கப்பட்ட நாள் ஆகிய விவரங்கள் அதில் கேட்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை பெறப்பட்ட பின், விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் அமைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்றுவது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ