உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உயிரினங்கள் தஞ்சம்; காக்குமா நெஞ்சம்?

உயிரினங்கள் தஞ்சம்; காக்குமா நெஞ்சம்?

மனித இனம் தோன்றுவதற்கு முன்பே, உலகில் விலங்கினங்கள் தோன்றிவிட்டன. உணவுச்சங்கிலி வாயிலாக, அவை இயற்கைக்கு உதவுவதால், காடுகளை வாழ்வாதாரமாக கொண்ட எண்ணற்ற உயிரினங்களை பாதுகாப்பது, ஒவ்வொருவரின் கடமை. இதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும், அக்., 4ல், உலக விலங்கு நாள் கடைபிடிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை நகரப்பகுதிகளில்கூட, பாம்பு, மயில் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. நாய்கள் இல்லாத வீதிகள் இல்லை. நகருக்குள் தவறி மான்கள் நுழைந்துவிடுகின்றன. உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனம் சூழ்ந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் பெருமளவில் உள்ளன; விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இரவு நேரங்களில், சாலையின் குறுக்கே, நெடுக்கே அவை ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்தை எதிர்கொள்கின்றனர்.உலக விலங்கு நாளில், விலங்குகள் பாதுகாப்பு என்பது முக்கியம் என்ற போதிலும், மனித - விலங்கு மோதல் சார்ந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. காடுகளில் இருந்து ஊடுருவும் விலங்குகளாக இருந்தாலும், அவற்றைக் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

மான்களைத் துரத்தும் நாய்கள்

தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் கூறியதாவது: கிராமப்புற தோட்டத்து வீடுகளில் கிணறுகள் கைப்பிடி சுவர் இல்லாமல் கிணறுகள் உள்ளன. அவற்றில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் உணவு தேடி வந்து கிணற்றில் விழுகின்றன. எங்களிடம் உள்ள வலை உள்ளிட்ட உபகரணங்களின் உதவியால் அவற்றை மீட்கிறோம். கிரமப்புறங்களில் இருந்து உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு வரும் மான்களும், தெரு நாய்களின் விரட்டலுக்கு பயந்து, திக்குதிசைத்தெரியாமல் ஓடி கிணற்றுக்குள் விழுந்து விடுகின்றன. வலை உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீட்புப்பணி மேற்கொள்கின்றனர்.வனப்பகுதிகளில் இருந்து ஏதேனும் சரக்கேற்றி வரும் லாரிகளில் வெள்ளெலி, ஆமை, எறும்புதின்னி, உடும்பு, கழுகு உள்ளிட்டவையும் பயணித்து, நகரப்பகுதிக்குள் வந்து விடுகின்றன; தகவலின் பேரில் அவற்றையும் மீட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுகிறோம். மேலும், உயரமான கட்டடங்களில் எவ்வித தொந்தரவு, இடையூறும் இல்லாத சூழல் இருப்பதால், ஆஸ்திரேலிய ரக ஆந்தைகள் அதிகளவில் தஞ்சம் புகுந்து, பல்கி பெருகுகின்றன. சில நேரங்களில், மக்களுக்கு இடையூறாக அவை மாறும் போது, அவற்றை மீட்கிறோம். மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளை பாதுகாப்பதிலும், அவற்றின் சீண்டலில் இருந்து மக்களை பாதுகாப்பதிலும் பங்களிக்கிறோம்.---

ஆட்டை மீட்க இறங்கியபோது கிணற்றுக்குள் சீறிய நாகங்கள்

அவிநாசி பகுதியில் ஒரு கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க கயிறு கட்டி ஒரு தீயணைப்பு வீரர் இறங்கும் போது, கிணற்றின் அடியில், குப்பையோடு குப்பையாக மறைந்திருந்த இருந்த, 2 நாகப்பாம்புகள் சீறியுள்ளன; சுதாரித்த அந்த வீரர் தப்பினார். இவ்வாறு, பல இடங்களில் உயிரை பணயம் வைத்து தான் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.அதேபோன்று, நகரில் உள்ள பனியன் நிறுவனங்கள், குடோன்கள் பலவற்றில் கண்ணாடி விரியன், காட்டு விரியன் பாம்புகளையும் தீயணைப்பு வீரர்கள் அதிகளவில் பிடிக்கின்றனர். குடோன்கள் மற்றும் குடியிருப்பை ஒட்டிய புதர்மண்டிய பகுதிகள், கழிவு தேங்கி நிற்கும் சாக்கடை, கால்வாய்களில் எலிகள் நிறைந்துள்ளன; அவற்றை உணவாக்கிக் கொள்வதற்காக பாம்புகள் வருகின்றன. கால்வாய் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வதன் வாயிலாக மட்டுமே, பாம்புகளின் அச்சுறுத்தலில் இருந்து மீள முடியும் என்பது தீயணைப்புத்துறையினரின் அறிவுரை.

காட்டுப்பன்றியை சுட பயிற்சி

ராஜேஷ், மாவட்ட வன அலுவலர், திருப்பூர் வனக்கோட்டம்: உடுமலை, அமராவதி, கொழுமம், காங்கயம் வனக்கோட்டத்தில், காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. காப்புக்காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் இருந்து, 3 கி.மீ.,க்குள் உள்ள காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க மட்டுமே, அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது; அமராவதியில், ஏழு காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடித்துள்ளோம். உடுமலை, அமராவதி, கொழுமம், காங்கயம் ரேஞ்சில் நான்கு கூண்டுகளைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். அரசின் வழிகாட்டுதல் படி, 5 கி.மீ., சுற்றளவில் இடையூறு ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு, வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு வனக்கோட்டம் சார்பிலும், வனத்துறை, உள்ளாட்சி நிர்வாகத்தினரை உள்ளடக்கி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மற்றும் கமிட்டி வாயிலாக, விவசாயிகள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காட்டுப்பன்றி உட்பட விலங்கினங்கள் மனிதர்களை தாக்குவது மற்றும் உயிரிழப்புக்கு அரசின் சார்பில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை