பின்னல் துணி வீணாவதற்கு முற்றுப்புள்ளி; அதிநவீனத்தால் அற்புதம்
திருப்பூர்,; தானியங்கி முறையில் செயல்படும் அதிநவீன 'கட்டிங்' இயந்திரங்களை நிறுவியுள்ளதன் மூலம், திருப்பூர் பின்னலாடைத் துறையினர், பின்னல் துணி வீணாவதை வெகுவாகக் குறைத்துள்ளனர். மேலும், இதன் மூலம், தொழிலாளர் தேவையும் குறைகிறது. பின்னலாடை உற்பத்தியில் திருப்பூர் முன்னணியில் தொடர்வதற்கு, நவீனத் தொழில்நுட்ப பயன்பாடு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நான்கு ஆண்டு இடைவெளியிலும், புதிய தொழில்நுட்பத்துடன், 'அப்டேட்' செய்யப்பட்ட இயந்திரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். பின்னலாடை உற்பத்தியில், செலவுகளை குறைத்தால் மட்டுமே, சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்கும் விலையை நிர்ணயிக்க முடியும். அதற்காக, 'கட்டிங் வேஸ்ட்', மின்சாரம், எரிபொருள், போக்குவரத்து என, ஒவ்வொரு பிரிவிலும் சிக்கன நடவடிக்கை துவங்கியுள்ளது. குறிப்பாக, பின்னல் துணியை வெட்டி, ஆடை தயாரிக்கும் போது, 10 முதல் 15 சதவீதம் வரை, 'கட்டிங் வேஸ்ட்' உருவாகும். அதிலிருந்து, மறுசுழற்சி ஆடைகள் தயாரிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. இருப்பினும், 'கட்டிங் வேஸ்ட்' உருவாவதை குறைக்க, 'கட்டிங்' இயந்திரங்கள் வாங்குவதில், கடந்த 10 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்த துவங்கினர். திருப்பூரில் முன்னணி நிறுவனங்கள், அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான கட்டிங் இயந்திரங்களை அறிமுகம் செய்து, வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.பின்னலாடை தொழிலில் பெரும் சவாலாக மாறியுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, அதிநவீன இயந்திரங்களின் அவசியம் உருவாகியுள்ளது. அதன்படி, பின்னல் துணி 'கட்டிங்' செய்வதில், நவீன இயந்திரங்கள் உற்ற துணைவனாக மாறியுள்ளன. 'கட்டிங்' பணிகளை செய்ய, துணிகளை அடுக்காக அடுக்கி வைக்க வேண்டும்; அதற்காக, 'ஸ்பிரிட்டர்' என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஐந்து பேர் செய்ய வேண்டிய இப்பணியை, ஒரே ஆப்பரேட்டர் மூலமாக, கச்சிதமாக செய்துவிடலாம். அடுக்கி வைக்கப்பட்ட துணி மீது, கட்டிங் இயந்திரங்களை கொண்டு, 'பேட்டன்' படி, மிக துல்லியமாக வெட்டி கொடுக்கலாம். வெட்டிய துணிகளை 'சைஸ்' வாரியாக பிரித்து காட்ட வேண்டும்; கட்டிங் செய்த பகுதியை தெளிவாக கண்டறிய, 'லேபிளிங்' மெஷின் உடனுக்குடன், அளவு மற்றும் பகுதியை குறிக்கும்,'ஸ்டிக்கர்' ஒட்டி, பணியை எளிதாக்கி வருகிறது. 'கட்டிங்' பணிகளை செய்ய, 20 பேர் தேவைப்படுவர்; ஆனால், நவீன கட்டிங் இயந்திரம், ஐந்து நபர்களை கொண்டு, கம்ப்யூட்டர் உதவியுடன், துல்லியமாக 'கட்டிங்' செய்து விடுகிறது.அதிகபட்சமாக, தினமும், 40 ஆயிரம் 'பீஸ்'கள் 'கட்டிங் செய்யப்படுகிறது; குறைந்தபட்சம், 1,000 'பீஸ்' கூட கட்டிங் செய்யலாம். 'ஸ்டிக்கர்' ஒட்டி, வகைப்படுத்தி காண்பிப்பதால், எளிதாக கண்டறிந்து, டெய்லருக்கு வழங்க முடிகிறது. ஆட்களை கொண்டு 'லே' அமைத்து, கட்டிங் செய்தால், துணி அதிகம் வேஸ்ட் ஆகும்; 'கட்டிங்' இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம், பின்னல் துணி வேஸ்ட் உருவாவதில், 6 சதவீதம் குறைந்துள்ளது, நேரடியாக நிரூபணமாகியுள்ளது.. - பின்னலாடை உற்பத்தியாளர்கள்.