உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனவிலங்குகளால் சேதம்; நிவாரணம் குறைவு; விவசாயிகள் வேதனை

வனவிலங்குகளால் சேதம்; நிவாரணம் குறைவு; விவசாயிகள் வேதனை

உடுமலை; 'வனவிலங்குகளால், சேதம் அடையும் சாகுபடி பயிர்களுக்கு நிவாரணத்தொகையை வனத்துறையினர் உயர்த்தி வழங்க வேண்டும்,' என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது.அவ்வகையில், உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், நீண்ட கால பயிராக தென்னை, மா சாகுபடி மற்றும் சீசன்களில் மக்காச்சோளம், நிலக்கடலை, மொச்சை உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.அதே போல், குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான பயிராக மக்காச்சோளம் சாகுபடியாகிறது. தற்போது புதிய பிரச்னையாக வனவிலங்குகள் தொல்லை இருந்து வருகிறது. இது அவர்களுக்கு தீராத தலைவலியாக உள்ளது.வனத்திலிருந்து வெளியேறும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால், அனைத்து வகை சாகுபடியும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காட்டுப்பன்றிகள் பரவல், வனத்தில் இருந்து 25 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவு சென்று விட்டது. இந்த வனவிலங்களுகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் வனத்துறைக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: வனவிலங்குகளால், தென்னை, மா உள்ளிட்ட அனைத்து வகை சாகுபடிகளும் பாதிக்கின்றன. குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் அதிகளவு சேதமாகிறது. ஆனால், வனத்துறை சார்பில், நிவாரணம் முறையாக வழங்கப்படுவதில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு, குறைந்தளவு தொகையே நிவாரணமாக வழங்குகின்றனர்.சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சொற்ப அளவுக்கு வழங்கும் நிவாரணத்தால் எவ்வித பலனும் இல்லை.தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உள்ளிட்ட துறையினரால், கையகப்படுத்தப்படும் நிலங்களில், இருக்கும் மரங்களை அகற்ற, நிவாரணத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே அளவு தொகையை, வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கும் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பரிந்துரைகளை, ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள், அரசுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பிரச்னையில், வனத்துறையினரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக அவர்கள் நிம்மதியடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி