பகலில் அலைமோதல்; மாலையில் முடக்கம் களைகட்டிய தீபாவளி வர்த்தகம் கன மழையால் திடீர் பாதிப்பு
திருப்பூர் : திருப்பூரின் கடை வீதிகள் நேற்று பகல் நேரத்தில் மூச்சுத்திணறின. தீபாவளிக்குப் பொருட்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர். மாலை நேரத்தில் கன மழையால், வர்த்தகம் முடங்கியது.புத்தாடை, மொபைல் போன்கள், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் பொருட்கள் என தீபாவளிக்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பட்டியலை, மனதிற்குள்ளேயே, குடும்பத் தலைவர்களும், இல்லத்தரசியரும் போட்டு வைத்திருப்பர். பின்னலாடை தொழிற்சாலைகள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களிலும் தொழிலாளர் மற்றும் ஊழியருக்கு போனஸ் பட்டுவாடா முடிந்துள்ளது.தாங்கள் எண்ணியதை வாங்கும் தருணம் வந்துவிட்டது என்றதும், திருப்பூருக்குப் பலரும் நேற்று குடும்பம், குடும்பமாக படையெடுத்தனர். அதிரடி சலுகைகள்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், முன்னணி கடைகளும், ேஷாரூம்களும், அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளன. குழந்தைகள், சிறுவர் -சிறுமியர், ஆண்கள்- பெண்கள் என, அனைத்து வயதினருக்கும், விதவிதமான ஆடைகள், ஜவுளிக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஜவுளிக்கடையும், 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடி விலையில், தீபா வளி விற்பனையை கலக்கி கொண்டிருக்கின்றன.தீபாவளி சிறப்பு விற்பனையில், 'எக்சேஞ்ச்' முற்றும் '0' சதவீத வட்டி யுடன் தவணை முறை திட்டமும், நடுத்த மக்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. கடைகளில், தீபாவளி காம்போ ஆபர்' என்ற பெயரில், குடும்பத்துக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்கப்படுகின்றன.இது, புதுமணத் தம்பதியருக்கு வழங்க ஏதுவாக இருக்கிறது. பழைய 'டிவி', வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி போன்ற பொருட்களை, 'எக்சேஞ்ச்' முறையில் புதிதாக மாற்றிக்கொள்ளவும், சிறப்பு விற்பனை கைகொடுப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.'பார்க்கிங்' செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதால், வாகனங்களை நிறுத்திவிட்டு, குமரன் ரோடு, காதர்பேட்டை, காமராஜர் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ரோடுகளில், மக்கள் நடந்தே பல கடைகளுக்கு சென்று, 'பர்ச்சேஸ்' செய்து, மகிழ்ச்சியுடன் எடுத்துச்சென்றனர். குமரன்ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று பகல் முழுவதும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. மாலையில் மழை
மாலை 6:30 மணிக்குத் துவங்கிய மழை, இரவு 8:00 மணிக்கு பின்பும் தொடர்ந்தது. இதனால், மாலை நேர வர்த்தகம் முடங்கியது. இதனால் வர்த்தகர்கள் வேதனையடைந்தனர்.இன்று முதல் கூட்டம் சற்று குறையும்; மீண்டும், 25 முதல் 29ம் தேதி இரவு வரை, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்; 30ம் தேதியும் ஏராளமானோர் 'பர்ச்சேஸ்' செய்ய வருவர்.