திருப்பூர்: விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் மூளை செயலிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன; அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. திருப்பூர், முதலிபாளையம், சிட்கோ, வெள்ளைக்கரடு பகுதியில் வசிப்பவர் எலிசபெத், 38; அவரது கணவர் வேலுசாமி; சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களது மகன், இளங்கோ, 15; 10ம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த, 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தனது நண்பரின் டூவீலரில் பின் அமர்ந்த படி, விஜயாபுரம் - சிட்கோ சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த டூவீலர் இவர்கள் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில், இளங்கோ, துாக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். தலையில் அடிபட்டு, திருப்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளை செயலிழந்த நிலையில், மூளைச்சாவை உறுதி செய்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இளங்கோவின் இதயம், கண்கள், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுத்து, ஆம்புலன்ஸில் கோவைக்கு அனுப்பி வைத்தனர். அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், கண்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்த இளங்கோ உடலுக்கு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி 'டீன்' மனோன்மணி, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவியர் என, அனைவரும் கூடி நின்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.