பழுதான பள்ளி கட்டடங்கள் அப்புறப்படுத்த முடிவு; ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம்
உடுமலை : திருமூர்த்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிதிலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் ஒன்றியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.உடுமலை ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மொத்தமாக 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில் உடுமலை ஒன்றிய அலுவலக கட்டடம், 62 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு தற்போதைய கட்டடம் இடிக்கப்பட உள்ளது. புதிய கட்டடம் அமையும் வரை, மாற்று இடத்தில் அலுவலகம் இயங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தில் உள்ள திருமூர்த்திமலையில் நீச்சல் குளம், சிறுவர் பூங்கா, சுற்றுலா மாளிகையை தளி பேரூராட்சியில் ஒப்படைப்பது குறித்து தீர்மானம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இதற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் மறுப்பு தெரிவித்ததால், தீர்மானம் அங்கீகரிக்கபடவில்லை.பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்து கட்டுவது, திருமூர்த்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிதிலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துதல், கண்ணம்மநாயக்கனுார், பாலப்பம்பட்டி, சமத்துவபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளின் கழிப்பறை கட்டடத்தை அப்புறப்படுத்துதல், எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சிதிலமடைந்த கழிப்பறை கட்டடத்தை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் புகார்
எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், எந்த நேரத்திலும் டாக்டர் இருப்பதில்லை. அவசர நிலையில் நோயாளிகள் சென்றாலும், முறையாக சிகிச்சை தருவதில்லை.இதனால் அவசர தேவைக்கும் கூட உடுமலை வரை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மானுபட்டியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்போது குடிநீர் குழாய் இணைப்புகள் பாதிக்கப்பட்டு, குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பி.டி.ஓ.,க்கள் கூறியதாவது:எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாதது குறித்து, வட்டார மருத்துவ அலுவலருக்கு கடிதம் வைக்கப்படும். மேலும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும், மீண்டும் பராமரிப்பு செய்வதற்கு அறிவுறுத்தப்படும்.திருமூர்த்திமலை சுற்றுலா மாளிகை, நீச்சல் குளம், சிறுவர் பூங்கா ஒப்படைத்தல் குறித்த தீர்மானம் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.