உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட மானியம் தாமதம்?

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட மானியம் தாமதம்?

திருப்பூர்: ‘தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தில், கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்ட மானிய உதவி முறையாக கிடைப்பதில்லை,’ என, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழக அரசின் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் சொந்த இடத்தில் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை நான்கு கட்டங்களாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் தாமதமாகவே தொடங்கப்பட்டது. இதன்படி, வீடு கட்டும் பயனாளிகளுக்கு அஸ்திவாரப் பணி நிறைவு, ஜன்னல் அமைக்கும் நிலை, கூரை அமைக்கும் நிலை, கட்டுமானப் பணி நிறைவு என நான்கு கட்டங்களாக மானியம் வழங்கப்பட வேண்டும். பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டதும், மூன்று மாதங்களுக்குள் வீடு கட்டி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுமானப் பணிகள் தொடங்கி மூன்று கட்டங்களை நிறைவு செய்த பிறகும், உரிய மானியத் தொகை கிடைக்காமல் பயனாளிகள் தவித்து வருகின்றனர். சிலருக்கு முதல் கட்ட மானியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் போதிய நிதி ஆதாரம் இருந்தும், பயனாளிகளுக்கு மானியம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மூன்று பயனாளிகளுக்கு மானிய உதவி கிடைக்கவில்லை என, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மானியத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி, நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. விரைவுபடுத்தலாமே! ஐ.என்.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சிவசாமி கூறியதாவது: கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் போதிய நிதி உள்ளது. இருப்பினும், கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் வாரிய உறுப்பினர்களுக்கு மானியம் வழங்கப்படாமல் உள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்தும், சில பயனாளிகளுக்கு ஒரு கட்ட மானியம் மட்டுமே கிடைத்துள்ளது. கட்டுமானப் பணிகளை முடித்த பயனாளிகளுக்கு உரிய மானியத்தை விடுவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்கட்டமாக, தொழிலாளர் துறை அதிகாரிகளை அழைத்து கலெக்டர் ஆய்வு நடத்தி, மானியம் வழங்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !