சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தாமதம்: கட்டுமானத்துறையினர் கவலை
திருப்பூர்: ‘‘சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க, தகுதியான கட்டுமானத் திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் கட்டட அனுமதி வழங்க வேண்டும்’’ என இந்திய கட்டுனர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. விதிமுறைப்படி, 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம். இதைப் பெற ஆறு மாதங்களுக்கு மேல் தாமதமாவதால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் திட்டப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்திய கட்டுனர் சங்க, மாநில முன்னாள் தலைவர் பழனிவேல் கூறியதாவது: அனுமதிக்காகக் காத்திருக்கும் காலத்திலும் வங்கிக் கடன் வட்டி, பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. கட்டுமானப் பொருட்கள், தொழிலாளர் கூலி உயர்வால் திட்டச் செலவுகளும் அதிகரிக்கின்றன. இதனால் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதுடன், வீடுகளின் விலையும் உயர்கிறது. எனவே, சுற்றுச்சூழல் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, தகுதியான திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். விண்ணப்பங்களைப் பரிசீலிக்கக் காலக்கெடு நிர்ணயித்து, இணையவழிக் கண்காணிப்பு வசதியும் ஏற்படுத்த வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், ஒரு மாதத்திற்குள் பதில் கிடைக்காவிட்டால் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். மாவட்டங்களில் சேவை மையங்கள் தேவை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் மாநில அளவிலான ஆணைய அலுவலகம் சென்னையில் மட்டுமே இருப்பதால், பிற மாவட்ட விண்ணப்பதாரர்கள் ஆவணங்களைச் சரிசெய்யவும், கூடுதல் சான்றுகள் அளிக்கவும் சென்னைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் செலவும், காலதாமதமும் அதிகரிக்கிறது. மாவட்ட அளவில் ஆவணச் சரிபார்ப்பு, விண்ணப்பத் தயாரிப்பு, தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்குச் சேவை மையங்கள் அமைக்க வேண்டும். கட்டடம், தொழில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் துறைகளை ஒருங்கிணைத்து ஒற்றைச் சாளர நடைமுறையை உருவாக்குவதுடன், தேவையான ஆவணங்களை ஒரே நேரத்தில் கோரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். – கட்டுமானத்துறையினர்