உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தினசரி மார்க்கெட் வளாகம் திறப்பதற்கு இழுத்தடிப்பு

தினசரி மார்க்கெட் வளாகம் திறப்பதற்கு இழுத்தடிப்பு

திருப்பூர்; திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட் வளாகம் திறப்பு விழா தாமதமாகிறது. இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப்பணி முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நான்கரை ஆண்டு கடந்தும் இன்னும் இழுத்தடித்து வருவதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் திருப்பூர், காமராஜ் ரோட்டில் உள்ள தினசரி மார்க்கெட் வளாகத்தை புதிதாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டது.தற்காலிகமாக இங்கிருந்த கடைகள், திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. அதுவரை, 429 கடைகள் இயங்கி வந்தன. இடமாற்றம் செய்த போது, 416 கடைகள் மட்டுமே தற்காலிக வளாகத்தில் இயங்கத் துவங்கின.

புதிய வளாகம் தயார்

30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மார்க்கெட் வளாகம் கட்டும் பணி துவங்கியது. 2.25 ஏக்கர் பரப்பில் இந்த வளாகம் இரு தளங்களாக கட்டப்பட்டுள்ளது.தரைத்தளம் மற்றும் முதல் தளம் என, மொத்தம் 396 கடைகள் உள்ளன. 250 இரு சக்கர வாகனங்கள், 85 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியுடன், கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்படுகிறது.கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் திட்டமிட்ட கட்டுமானப் பணி தற்போது நான்கரை ஆண்டுகளான நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இருப்பினும் மார்க்கெட் எப்போது பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனத் தெரியாத நிலை உள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

'தனி ஏலம் நடத்தப்படும்'

மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, ''வியாபாரிகள் தரப்பில் கட்டுமானத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாநகராட்சி பொறியியல் பிரிவினர் அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளனர். பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. மின் இணைப்பு பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.கடைகளைப் பொறுத்தவரை தனி ஏலம் என்ற நடைமுறை மட்டுமே பின் பற்றப்படும். கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த உடன் ஏலம் விடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். விரைவில், நடப்பு நிதியாண்டு முடியும் முன் ஏலம் விடப்படும்'' என்றார்.

கட்டுமானத்தில் குறைபாடுகள்

மார்க்கெட் வளாகம் கட்டுமானப் பணியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. கடைகளுக்கு இடையே நடந்து செல்லும் பாதை நான்கடிஇடைவெளியில் உள்ளது. பெண்கள் பாதுகாப்பாகச் சென்று வர முடியாது. வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து வெளிச்சம் இல்லாமல் உள்ளது. சுத்திகரித்த குடிநீர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும். கடைகளுக்கு மின் இணைப்புகள் தர வேண்டும். வளாகத்தினுள் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். பார்க்கிங் வசதி தேவைக்கேற்ப இல்லை. நுகர்வோர் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.- சண்முகசுந்தரம்,தலைவர், நல்லுார் நுகர்வோர் நலமன்றம்.கடை நடத்தியோருக்கு முன்னுரிமைவியாபாரம் செய்தவர்கள் கட்டுமானப் பணி தாமதம் காரணமாக நம்பிக்கை இழந்து வேறு தொழில், வேறிடம் தேடிச் சென்று விட்டனர். தற்போது 416 பேரில் 260 பேர் மட்டுமே உள்ளோம். இரண்டாண்டுகளில் முடிப்பதாக உறுதி கூறி நான்கரை ஆண்டாகியும் இதுவரை கடைகளை வாடகைக்கு விடாமல் உள்ளனர். வளாக கட்டுமானத்தில் பல்வேறு திருத்தங்களை எங்கள் சார்பில் தெரிவித்துள்ளோம். மேலும் 50 கடைகள் கட்ட இடம் உள்ளது. பார்க்கிங் வசதி கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். கடைகள் அமைப்பிலும், காற்றோட்டம் மற்றும்வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.மார்க்கெட்டுக்கு சம்பந்தமில்லாமல் முன் பகுதியில் இருந்த கடைகளையும் இதில் சேர்த்துக் கொண்டு அதற்கு தனி ஏலம் விடும் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது. அது ஏற்புடையதல்ல. மேலும் கடைகளுக்கு தனி ஏலம் என்பதும் சரி வராது. இதுவரை இருந்த நிலையில், ஒட்டு மொத்த குத்தகை நடைமுறை தான் ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி முன்னர் கடை நடத்திய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச உள்ளோம்.- தங்கமுத்து, தலைவர், மாநகராட்சி தினசரிமார்க்கெட் வியாபாரிகள் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை