உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களில் முடங்கிய உதவிக்குழுக்களுக்கு... தொழில் துவங்க வாய்ப்பு! மகளிர் திட்டம் வாயிலாக பணிகள் தீவிரம்

கிராமங்களில் முடங்கிய உதவிக்குழுக்களுக்கு... தொழில் துவங்க வாய்ப்பு! மகளிர் திட்டம் வாயிலாக பணிகள் தீவிரம்

உடுமலை: பல்வேறு காரணங்களால், மூன்று ஒன்றியங்களில், செயல்பாடு இல்லாமல் முடங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை கண்டறிந்து, அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் மகளிர் திட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கிராமப்புற பெண்களுக்கு மீண்டும் தொழில்கள் நடத்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், முன்பு, 2 ஆயிரத்துக்கும் அதிகமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவக்கப்பட்டு, கிராமப்புறத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.இக்குழுக்களின் செயல்பாடுகளை பொறுத்து, பல்வேறு தொழில்கள் துவங்க, மகளிர் திட்டம் வாயிலாக ஏற்பாடு செய்து தரப்பட்டது.மேலும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் திறன்களை கண்டறிந்து, ஊக்குவித்து தொழில் முனைவதற்கும் மகளிர் திட்டத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.பெண்கள் உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்களின் வாயிலாக, வருவாய் ஈட்டுவதற்கும் கருத்தாளர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.இவ்வாறு, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் செயல்பாட்டில் இருந்தன. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தபட்சம், 500க்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.அரசின், 'வாழ்ந்து காட்டுவோம்', வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், இக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால், பெரும்பாலான சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.இதனால், கிராமப்புற பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். குழு உறுப்பினர், வயது முதிர்வு, வேறு கிராமத்துக்கு இடம் மாறுவது உள்ளிட்ட காரணங்களால், சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு குறைந்தது.இக்குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, மகளிர் திட்ட அலுவலர்கள் வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மூன்று ஒன்றியங்களிலும், மொத்தமுள்ள குழுக்களில், 30 சதவீத குழுக்கள் செயல்பாடில்லாமல் உள்ளது கண்டறியப்பட்டது.இக்குழுவினர் போதிய வேலைவாய்ப்பு இல்லாமலும், இதற்காக பெற்ற கடனை திருப்பிச்செலுத்த முடியாமல், திணறி வருகின்றனர். எனவே, குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

உதவிகள் மேற்கொள்ளப்படும்

மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது: கிராமங்களில் செயல்பாடு இல்லாமல் முடங்கியுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் கண்டறியப்பட்டது. அந்தந்த வட்டார பொறுப்பாளர்கள் வாயிலாக மீண்டும் அக்குழுக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தியுள்ளோம்.அக்குழுக்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பயிற்சிகளுக்கு பிறகு, அக்குழுவினர் தொழில் துவங்கவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக உதவிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ