உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதிப்பிழந்த சணல் சாக்கு; வியாபாரிகள் கண்ணீர்

மதிப்பிழந்த சணல் சாக்கு; வியாபாரிகள் கண்ணீர்

பொங்கலுார்; முன்பெல்லாம் அரிசி, பருப்பு, சர்க்கரை என அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்ய சணல் சாக்குகளே பயன்படுத்தப்பட்டன. விலை அதிகம் என்பதால் இதன் உபயோகம் குறைந்து வருகிறது. இதைவிட விலை மலிவான பாலிதீன் பைகள், போம் பைகள் என விதவிதமான பைகள் சந்தைக்கு வந்து விட்டன. இவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டு துாக்கி எறிவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நகரங்களில் குப்பை அதிகரிப்பால் சுகாதார சீர்கேடு, நீர் மாசுபாடு என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. சணல் சாக்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால், குப்பை பிரச்னை எழ வாய்ப்பில்லை. சிறு வியாபாரிகள் ஊர் ஊராகச் சென்று பழைய சாக்குகளை விலைக்கு வாங்கி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது செகண்ட்ஸ் சாக்குகள் மதிப்பிழந்து வருகின்றன. விரைவில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக காய்கறி, கருவாடு, மக்காச்சோளம் என ஒரு சில பொருட்கள் சணல் சாக்குகளால் பேக்கிங் செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் வருகையால் மறு பயன்பாட்டு பொருளாக பயன்பட்டு வந்த சணல் சாக்கு விற்பனை குறைந்து விட்டது. செகண்ட்ஸ் வியாபாரிகள் கூறுகையில், ''அரிசி சிப்பம் கட்ட பயன்படும் சாக்கு புதியது, 100 ரூபாய். பழைய சாக்கு விலை சரிந்து, 20, 40 என விலை போகிறது. பாலிதீன் பைகளால் இவற்றின் மறு உபயோகம் குறைந்து வருகிறது. ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைக்க கட்டடம் கட்டுபவர்கள் பழைய சணல் சாக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் விலையை மிகவும் மலிவாக கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தவிர்க்க முடியாத பொருள் சணல் சாக்கு. சணல் சாக்குகளின் உபயோகத்தை அதிகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் காக்கப்படும் எங்கள் வாழ்வாதாரமும் உயரும். சணல் சாக்கு உபயோகத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை