உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி ரிலீஸ் படங்கள்; ரசிகர்களின் எண்ணங்கள்

தீபாவளி ரிலீஸ் படங்கள்; ரசிகர்களின் எண்ணங்கள்

பட்டாசும், புத்தாடையும் எந்தளவு தீபாவளியின் ஒரு அங்கமாக இருக்கின்றன. சினிமா தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் புதிய சினிமாக்களும், மற்றொரு அங்கமாக உள்ளன.அதுவும், தான் ரசிகராக உள்ள நடிகரின் சினிமா ரிலீஸ் செய்யப்படும் போது, கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.திரைக்கு வரும் சினிமாக்களில் பெரிய ஹீரோக்கள், சின்ன ஹீரோக்கள், பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்கள் என்ற வகைப்படுத்துதலுடன், தியேட்டர்களின் ரசிகர் கூட்டம் வரிசை கட்டும்.அந்த வகையில் இந்த முறை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என, ரசிகர் பட்டாளத்தை அதிகம் வைத்துள்ள ஹீரோக்களின் படங்கள், இந்த தீபாவளிக்கு வரவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், கவின் நடிப்பில் பிளடி பெக்கர் போன்ற படங்கள் வெளியாகின்றன. தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

நல்ல படங்கள் ஓடும்

ஈஸ்வரன், விஜய் ரசிகர்:நடிகர் விஜய், துவக்கத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும். அவர் அரசியலுக்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. அவர் ஏற்கனவே, மக்களுக்கு கல்வி, மருத்துவம் என, பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அப்படியே தொடர்ந்திருக்கலாம். இப்போது, நடிகர் கவின், மிகுந்த மெனக்கெடலுடன் நடிக்கிறார்.பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்றெல்லாம் ரசிர்கள் தற்போது பார்ப்பது இல்லை. கதை நன்றாக இருந்தால் படத்தை ரசிக்கின்றனர். படங்களின் டிரைலர், டீஸரை பார்த்தே, படம் நன்றாக இருக்குமா, இருக்காதா என்பதை தீர்மானித்து விடுகின்றனர்.

கதையம்சம் தேவை

ரவிகுமார், தலைவர், திருப்பூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்:திருப்பூரில் பொழுதுபோக்கு அம்சங்கள் என, எதுவும் இல்லாததால், சினிமா தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம் தான். சின்ன பட்ஜெட் மற்றும் சின்ன ஹீரோ நடித்த படங்கள், நல்ல கதையம்சத்துடன் வெளியாகும் படங்களை மக்கள் ரசிக்கின்றனர். பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தாலும் கூட, ரசிகர்கள் புறக்கணித்து விடுகின்றனர்.

ஹீரோ யாராக இருந்தாலும்...

கதிர்வேல், நடிகர் கவின் ரசிகர்:வளர்ந்து வரும் நடிகராக, நடிகர் கவின் என்னை ஈர்த்துள்ளார். அவரது படங்கள் நன்றாக இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் பெரிய, சின்ன ஹீரோக்கள் என, ரசிகர்கள் பார்ப்பது இல்லை. இம்முறை தீபாவளிக்கு, சின்ன ஹீரோக்கள் நடித்த படங்கள் தான் ரிலீஸ் ஆகின்றன. நல்ல கதையை உள்ளடக்கிய படங்கள் எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் பார்க்கின்றனர்; ரசிக்கின்றனர்.

யதார்த்தம் அவசியம்

முகமது இப்ராகிம், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்:மற்ற படங்களை விட அமரன், நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த நிலைக்கு வளர்வார். சிவகார்த்திகேயன், தனது சொந்த உழைப்பில் முன்னேறி வருகிறார். தீபாவளிக்கு அவரது படம் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சியளிக்கிறது. ரசிகர்களின் மனநிலையும் தற்போது மாறியிருக்கிறது. உண்மை கதைகள், யதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி