விவசாயத்தை அழிக்க நினைப்பதா? ஆர்ப்பாட்டத்தில் இடுவாய் கிராம மக்கள் ஆவேசம் :மாநகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு
திருப்பூர்: ''திருப்பூர் மாநகராட்சியின் குப்பை லாரிகள் இடுவாய் கிராமத்துக்குள் நுழைய முடி யாது; விவசாயத்தை அழிக்க அனுமதிக்க மாட்டோம்'' என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடுவாய் மக்கள் ஆவேசத்துடன் கூறினர். திருப்பூர் ஒன்றியம், இடுவாய் கிராமம், சின்னக்காளிபாளையத்தில், குப்பை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கைகோர்த்து, தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இடுவாய் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்; உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். இடுவாய் கிராமம், சின்னக்காளிபாளையத்தில், திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்சியினர், விவசாயிகள் பேசினர். மனசாட்சி இருக்கிறதா? மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆவேசத்துடன் பேசிய மூதாட்டி நாகரத்தினம்: எங்க ஊர்ல குப்பையை கொண்டுவந்து போட்டு, கிணத்து தண்ணீய நாறடிக்கிறாங்க... விவசாய குடும்பங்களை நாசம் செய்யோணும்ங்கறுது மாநகராட்சியோட திட்டம். பசுமாடெல்லாம் மேய்ஞ்சு ஆரோக்கியமா பால் கறக்குது... தினம் நுாறு குழந்தைகளுக்கு பால் கொடுக்குது. குழந்தைகளோட வயித்துல மண்ணை போடணும்ன்னு நெனைக்கறது நியாயமா? விவசாயிகள் நல்லா இருந்தாதானே, தொழிலாளர்களும் வாழ முடியும்? குழந்தைகளை படிக்க வைக்கோணும்கறீங்க... எதை வச்சு குழந்தைகளை படிக்கவைக்கிறது? விவசாயத்தில் மண்ணை போட நினைப்பது நியாயம் இல்லையே? மனசாட்சின்னு இருந்தா, மக்களுக்கு நன்மை செய்யுங்க... மாநகராட்சி குப்பைகளை எங்க ஊருக்கு கொண்டுவராதீங்க! அடக்குமுறைக்கு அஞ்சோம் மூதாட்டி பர்வதம்: பி.ஏ.பி., வாய்க்காலுக்காக, ஒவ்வொரு விவசாயியும் பாதிக்கு மேல் நிலத்தை இழந்துட்டோம். ஒருத்தருக்கு பாதகம்ன்னாலும் பலருக்கு நன்மைன்னு நெனைச்சோம்; அத்திக்கடவு திட்ட தொட்டி எங்க ஊர்ல கட்டுனாங்க... ஆனா, எங்க ஊருக்கு தண்ணீ இல்ல. 185 கிராமங்களுக்கு பயன்னு எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இடுவாய்மக்கள் அந்தளவு பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கொண்டவங்க. இப்ப மாநகராட்சி குப்பைகளை இங்க கொண்டுவந்து கொட்றாங்க... எத்தனையோ தொழில் நுட்பம் வந்திருச்சு... அங்கங்கயே அழிக்கிற மாதிரி தொழில்நுட்பம் எல்லாம் வந்திருச்சு... அதை விட்டுட்டு பாறைக்குழில கொட்டி மாசுபடுத்தறீங்க... நாங்கள்லாம் பிழைப்பு நடத்த எங்க போறது? அடக்குமுறையை கையாண்டாலும், குப்பை கொட்ட அனுமதிக்கமாட்டோம். அடுத்தடுத்து போராட்டம் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி: இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் இடம், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் விலை கொடுத்து வாங்கிய, பட்டா நிலம் அல்ல. 1968 ல், விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கவேண்டிய இனாம் நிலம், திருப்பூர் மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தவேண்டிய அந்த நிலத்தை, மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்துவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இடுவாயில் குப்பை கொட்டும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கைவிடவேண்டும்; இல்லையென்றால், அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்படும். முன்னாள் ஊராட்சி தலைவர் கணேஷ் உள்பட அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க. - ம.தி.மு.க., - காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சியினர், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் இடுவாய், சின்னக்காளிபாளையம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.